டி20 உலகக் கிண்ணக் கனவு அணியில் இந்தியர் அறுவர்

2 mins read
9aa06f45-e626-4cf9-8ce7-feb6a46ccea6
இரண்டாம் முறையாக டி20 உலகக் கிண்ணத்தை வென்ற மகிழ்ச்சியில் இந்திய கிரிக்கெட் அணியினர். - படம்: ஏஎஃப்பி

துபாய்: அண்மையில் நடந்து முடிந்த டி20 உலகக் கிண்ணத் தொடருக்கான கனவு அணியை அனைத்துலக கிரிக்கெட் மன்றம் (ஐசிசி) அறிவித்துள்ளது.

அதில், கிண்ணம் வென்ற இந்திய அணியிலிருந்து அறுவர் இடம்பெற்றுள்ளனர். அணித்தலைவர் ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ், ஹார்திக் பாண்டியா, அக்சர் பட்டேல், ஜஸ்பிரீத் பும்ரா, அர்ஷ்தீப் சிங் ஆகியோரே அந்த அறுவர்.

இருப்பினும், இறுதிப் போட்டியில் ஆட்ட நாயகன் விருது வென்ற விராத் கோஹ்லிக்கு அவ்வணியில் இடம் கிடைக்கவில்லை.

இந்திய அணியை வெற்றிகரமாக வழிநடத்தி, இரண்டாம் முறையாக டி20 உலகக் கிண்ணத்தை வெல்ல முக்கியக் காரணமாக விளங்கிய ரோகித் சர்மா, 100 பந்துகளுக்கு 156.7 ஓட்டங்கள் என்ற பந்தடிப்பு விகிதத்துடன் மொத்தம் 257 ஓட்டங்களைக் குவித்தார்.

தொடர் நாயகன் விருது வென்ற பும்ரா மொத்தம் 15 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அவர் சராசரியாக ஓவருக்கு 4.17 ஓட்டங்களை மட்டுமே விட்டுத் தந்தது குறிப்பிடத்தக்கது.

அரையிறுதிவரை முன்னேறி வியப்பளித்த ஆப்கானிஸ்தான் அணியிலிருந்து மூவர் ஐசிசி கனவு அணியில் இடம்பெற்றுள்ளனர்.

அமெரிக்காவிலும் வெஸ்ட் இண்டீசிலும் நடந்த டி20 உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி ஏழு ஓட்டங்களில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி, கிண்ணத்தைக் கைப்பற்றியது.

ஐசிசி கனவு அணி: ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ், ஹார்திக் பாண்டியா, அக்சர் பட்டேல், ஜஸ்பிரீத் பும்ரா, அர்ஷ்தீப் சிங் (அறுவரும் இந்தியர்), ரகுமானுல்லா குர்பாஸ், ரஷீத் கான், ஃபஸல்ஹக் ஃபரூக்கி (மூவரும் ஆப்கானிஸ்தான்), மார்க்கஸ் ஸ்டோய்னிஸ் (ஆஸ்திரேலியா), நிக்கலஸ் பூரன் (வெஸ்ட் இண்டீஸ்). 12வது வீரர்: ஆன்ரிக் நோர்க்கியா (தென்னாப்பிரிக்கா).

குறிப்புச் சொற்கள்