லிவர்பூல்: லிவர்பூல் குழு யுயேஃபா சாம்பியன்ஸ் லீக் காற்பந்துப் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டது அதிர்ச்சியான ஒன்று என்பதை ஒப்புக்கொண்டுள்ளார் அதன் நிர்வாகி ஆர்ன ஸ்லொட்.
அதேவேளை, மிகச் சிறப்பாக விளையாடிய பிரான்சின் பிஎஸ்ஜி குழுவிடம் இங்கிலிஷ் பிரிமியர் லீக் குழுவான லிவர்பூல் தோல்வியடைந்தது தனக்கு ஆறுதல் தருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சாம்பியன்ஸ் லீக்கின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் லிவர்பூலும் பிஎஸ்ஜியும் இருமுறை மோதின. இரு ஆட்டங்களின் மொத்த கோல் எண்ணிக்கை 1-1ஆக இருந்தது.
அதனைத் தொடர்ந்து சிங்கப்பூர் நேரப்படி புதன்கிழமை (மார்ச் 12) அதிகாலை நடந்த இரண்டாம் ஆட்டத்துக்குப் பிறகு பெனால்டிகளின் மூலம் வெற்றிபெறும் குழு தீர்மானிக்கப்பட்டது. பெனால்டிகளில் 4-1 எனும் கோல் கணக்கில் வென்றது பிஎஸ்ஜி.
“இது அதிர்ச்சி தரும் நிகழ்வுதான்,” என்றார் ஸ்லொட்.
“அதேவேளை, ஐரோப்பாவின் ஆகச் சிறந்த குழுக்களில் ஒன்றுடன் போராடிய பிறகே வெளியேற்றப்பட்டுள்ளோம். அபாரமான இந்த ஆட்டம் முடிய வேண்டாமே என்று உலகில் ஒவ்வொரு ரசிகரும் எண்ணியிருப்பார் என்று நான் நம்புகிறேன். இப்படிப்பட்ட ஓர் ஆட்டத்தில்தான் தோல்வியடைந்தோம்,” என ஸ்லொட் பெருமைகொண்டார்.
இச்சுற்றின் முதல் ஆட்டத்தில் லிவர்பூல் 1-0 எனும் கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது ஆட்டத்தில் அதே கோல் எண்ணிக்கையில் வென்று சுற்றை பெனால்டிகள் வரை கொண்டு சென்றது பிஎஸ்ஜி.

