உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியைக் காக்கும் மோப்பநாய்கள்

உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியைக் காக்கும் மோப்பநாய்கள்

படம்: ராய்ட்டர்ஸ்

18 Jul 2026 - 4:24 pm

1 mins read

இங்கிள்வுட்: அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய நாடுகள் இணைந்து நடத்தும் உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில், பாதுகாப்புப் பணியின் முதற்கட்ட அரணாக நூற்றுக்கணக்கான மோப்பநாய்கள் களமிறக்கப்பட்டுள்ளன.

புவிசார் அரசியல் பதற்றங்களுக்கும் ஈரானிய அணி களமிறங்கிய ஆட்டங்களின்போது ஏற்பட்ட போராட்டங்களுக்கும் நடுவில், தீவிரவாத அச்சுறுத்தல்களை முறியடிக்க மோப்பநாய்கள் பயன்படுத்தப்படுகின்றன.

வெடிபொருள்கள், ஆயுதங்கள் போன்றவற்றை மோப்பம் பிடிப்பதில் அமெரிக்காவின் அலிட் யுனிவர்சல் நிறுவனத்தின் 300 நாய்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. போட்டியை ஏற்று நடத்தும் மூன்று நாடுகளின் 16 நகர்களில் ஆட்டங்கள் நடக்கும் அரங்குகளில் மட்டுமன்றி, பயிற்சி இடங்கள், ஹோட்டல்கள், போக்குவரத்துப் பாதைகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

ரசிகர்களை அச்சுறுத்தாமல் இருக்க, ஜெர்மன் ஷெப்பர்ட் போன்ற மூர்க்கத்தனமான வகைகளுக்குப் பதிலாக, அன்பான லேப்ரடார் வகை நாய்கள் அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றன. இந்த ஏற்பாடு, ரசிகர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தாமல், குற்றச்செயல்களுக்கு ஒரு முக்கியத் தடுப்பரணாக விளங்குகிறது.

இதற்கிடையே, மெக்சிகோவின் குவாடலஹாரா நகரில் வெடிபொருள்களைக் கண்டறிய ரோபோ நாய்களும் பயன்படுத்தப்பட்டன. இதுவரை உலகக் கிண்ணப் பாதுகாப்புப் பணிகள் அனைத்தும் எவ்வித அசம்பாவிதமும் இன்றிச் சிறப்பாகக் கையாளப்பட்டுள்ளன.

குறிப்புச் சொற்கள்
உலகக் கிண்ணம்காற்பந்துபாதுகாப்பு