தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

காற்பந்து: ரியால் மட்ரிட் நிர்வாகியாக அலோன்சோ நியமனம்

1 mins read
f7f3453c-a807-4f3f-9b94-c97ffaca5e9d
ரியால் மட்ரிட் காற்பந்துக் குழுவின் நிர்வாகியாகச் செயல்பட மூவாண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார் ஸாபி அலோன்சோ, 43. - கோப்புப்படம்: ஏஎஃப்பி

மட்ரிட்: முன்னணி ஸ்பானியக் காற்பந்துக் குழுவான ரியால் மட்ரிட்டின் புதிய நிர்வாகியாக அதன் முன்னாள் ஆட்டக்காரரான ஸாபி அலோன்சோ நியமிக்கப்பட்டுள்ளார்.

ஸ்பெயின் நாட்டவரான அலோன்சோ, ரியால் குழுவிற்காக ஆறு பருவங்களில் விளையாடி, பல கிண்ணங்களை வெல்ல முக்கியக் காரணமாகத் திகழ்ந்துள்ளார்.

ரியாலுடன் மூன்று ஆண்டுகளுக்கு, அதாவது 2028 ஜூன்வரை ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளார் 43 வயதான அலோன்சோ.

கடந்த சனிக்கிழமையுடன் (மே 24) ரியால் நிர்வாகியாக கார்லோ அன்சலோட்டியின் பதவிக்காலம் முடிவிற்கு வந்தது. இத்தாலியரான அன்சலோட்டி பிரேசில் தேசிய அணிக்குப் பயிற்சியளிக்க ஒப்புக்கொண்டுள்ளார்.

இதற்குமுன் ஜெர்மனியின் பாயர் லிவர்குசன் குழுவின் நிர்வாகியாகச் செயல்பட்டார் அலோன்சோ. கடந்த 2022 அக்டோபரில் அப்பொறுப்பை ஏற்ற அவர், 2023-24 பருவத்தில் அக்குழு முதன்முறையாக ஜெர்மானிய லீக் பட்டத்தைக் கைப்பற்ற உதவினார். அப்பருவத்தில் அக்குழு ஓர் ஆட்டத்தில்கூட தோற்காமல் லீக்கை வென்றது குறிப்பிடத்தக்கது. அப்பருவத்தில் ஜெர்மானியக் கிண்ணத்தையும் வென்ற லிவர்குசன், யூரோப்பா லீக்கின் இறுதிவரை முன்னேறியது.

ரியால் நிர்வாகியாக திங்கட்கிழமை (மே 26) அறிமுகப்படுத்தப்படவிருக்கும் அலோன்சோ, வரும் ஜூன் 1ஆம் தேதிமுதல் அப்பொறுப்பை ஏற்பார்.

அவர் நடப்பு இங்கிலிஷ் பிரிமியர் லீக் வெற்றியாளரான லிவர்பூல் குழு சார்பிலும் விளையாடியிருப்பது நினைவுகூரத்தக்கது.

குறிப்புச் சொற்கள்