தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

காற்பந்து: மீண்டுவரத் துடிக்கும் ஆர்சனல் அணி

2 mins read
3d5d35d3-a74d-4648-b757-568875142950
கடைசியாக விளையாடிய மூன்று இங்கிலிஷ் பிரீமியர் லீக் ஆட்டங்களில் இரண்டில் தோல்வி, ஒன்றில் சமநிலை என வெற்றி இல்லாமல் ஆர்சனல் தடுமாறுகிறது.  - படம்: ராய்ட்டர்ஸ்

லண்டன்: ஆர்சனல் மீண்டும் வெற்றிப் பாதைக்குத் திரும்பும் என்று அந்த அணியின் மிக்கல் அர்டெட்ட நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

இங்கிலிஷ் பிரீமியர் லீக் காற்பந்துப் போட்டியில் கடந்த சில ஆட்டங்களாக ஆர்சனல் அணியால் வெற்றிபெற முடியவில்லை. கடைசியாக விளையாடிய மூன்று ஆட்டங்களில் இரண்டில் தோல்வி, ஒன்றில் சமநிலை என வெற்றி இல்லாமல் ஆர்சனல் தடுமாறுகிறது.

அதனால் 18 புள்ளிகளுடன் ஆர்சனல் அணி புள்ளிப்பட்டியலில் ஐந்தாம் நிலைக்குத் தள்ளப்பட்டது.

இந்நிலையில் ஆர்சனல் அணி செல்சி அணியுடன் மோதவுள்ளது. சிங்கப்பூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவுக்குப் பின் 12.30 மணிக்கு (நவம்பர் 11) ஆட்டம் நடைபெறுகிறது.

“இந்தப் பருவத்தை நன்றாகத் தொடங்கினோம். ஆனால் இப்போது திடீரென ஒரு சிறு தடுமாற்றம். இதில் இருந்து மீண்டு வருவோம்,” என்று அர்டெட்ட கூறினார்.

வெற்றிக்காக போராட ஆர்சனல் அணி வீரர்கள் தயாராக இருக்கிறார்கள். அதனால் நம்பிக்கை உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

கடந்த பருவத்தைவிட இந்தப் பருவத்தில் வீரர்கள் பலமடங்கு கடின உழைப்பு கொடுத்துள்ளனர். இருப்பினும் வெற்றி கிடைக்கவில்லை. முந்தைய ஆட்டங்களில் செய்த தவறை மீண்டும் செய்யமாட்டோம் என்றும் அர்டெட்ட கூறினார்.

புள்ளிப்பட்டியலில் செல்சி 18 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளது.

செல்சிக்கு இப்பருவம் ஏற்ற இறக்கமாக உள்ளது. இருப்பினும் அதன் முன்கள வீரர்கள் அதிரடியாக ஆடுவதால் கோல் அடிப்பதில் அந்த அணிக்கு சிக்கல் இல்லை.

இந்த ஆட்டத்தில் தோற்கும் அணிக்கு இப்பருவ கிண்ணத்தை வெல்லும் வாய்ப்பு நழுவக்கூடும். அதனால் இரு அணிகளும் ஆட்டத்தை வெல்லப் போராடலாம் என்று கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.

சனிக்கிழமை (நவம்பர் 9) மாலை நிலவரப்படி இங்கிலி‌ஷ் பிரிமியர் லீக் புள்ளிப்பட்டியலில் 25 புள்ளிகளுடன் லிவர்பூல் உள்ளது. நடப்பு வெற்றியாளர் மான்செஸ்டர் சிட்டி 23 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. 19 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் நாட்டிங்ஹம் ஃபாரஸ்ட் அணி இருக்கிறது.

குறிப்புச் சொற்கள்