லண்டன்: பயிற்றுவிப்பாளர் தாமஸ் தூச்செல்லின் தலைமையில் இங்கிலாந்து காற்பந்து அணி அதன் முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
இங்கிலாந்து அணி அல்பேனியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.
ஆட்டத்தின் 20வது நிமிடத்தில் இங்கிலாந்தின் மைலெஸ் லூயிஸ் ஸ்கெலி கோல் அடித்தார். 77வது நிமிடத்தில் அணித்தலைவர் ஹேரி கேன் ஒரு கோல் அடித்து அசத்தினார்.
தனது முதல் ஆட்டத்திலேயே வெற்றிபெற்றது மகிழ்ச்சி தந்தாலும் இன்னும் பல இடங்களில் முன்னேற்றம் தேவை என்று தாமஸ் தெரிவித்தார்.
சனிக்கிழமை நள்ளிரவுக்குப் பின் நடந்த உலகக் கிண்ணத்திற்கான தகுதிச் சுற்று ஆட்டத்தில் இங்கிலாந்து அதிரடியாக விளையாடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் இங்கிலாந்து அணியால் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யமுடியவில்லை. பல நேரங்களில் அது தடுமாறியது. பலமான அணிக்கு எதிராக விளையாடி இருந்தால் தோல்விகூட ஏற்பட்டிருக்கலாம் என்று கவனிப்பாளர்கள் தெரிவித்தனர்.
ஆட்டத்தின் இரண்டாம் பாதியில் சரியாக விளையாடவில்லை என்று பயிற்றுவிப்பாளர் தாமசும் ஒப்புக்கொண்டார்.
இனிவரும் ஆட்டங்களில் தவறுகளைச் சரிசெய்துகொண்டு சிறப்பான விளையாட்டை வெளிப்படுத்துவோம் என்றார் அவர்.

