காற்பந்து: சிட்டியுடன் மோதும் லிவர்பூல்

2 mins read
2158004d-381a-4e69-b578-13e96f670df9
ஆஸ்டன் வில்லாவுக்கு எதிரான ஆட்டத்தில் லிவர்பூல் தடுமாறியது. - படம்: ராய்ட்டர்ஸ்

லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக்கின் நடப்பு வெற்றியாளர் மான்செஸ்டர் சிட்டியும் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் லிவர்பூல் அணியும் மோதவுள்ளன.

சிங்கப்பூர் நேரப்படி ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவுக்குப் பின் 12.30 மணிக்கு (பிப்ரவரி 24) நடக்கிறது.

லிவர்பூல் அணி கடைசியாக விளையாடிய மூன்று பிரிமியர் லீக் ஆட்டங்களில் இரண்டு சமநிலை, ஒரு வெற்றி மட்டுமே பெற்றது.

ஆஸ்டன் வில்லாவுக்கு எதிரான ஆட்டத்தில் லிவர்பூல் தடுமாறியது. வெல்ல வேண்டிய ஆட்டத்தை லிவர்பூல் சமநிலையில் முடித்தது.

பிரிமியர் லீக் கிண்ணத்தை வெல்ல வேண்டும் என்றால் லிவர்பூல் மீண்டும் வெற்றிப்பாதைக்குத் திருப்ப வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

மறுபக்கம் மான்செஸ்டர் சிட்டி சாம்பியன்ஸ் லீக்கில் அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியாமல் வெளியேறிய சோகத்தில் உள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக பிரிமியர் லீக்கில் அசைக்கமுடியாத அணியாக வலம் வந்த சிட்டிக்கு கடந்த நான்கு மாதங்களாக அடிமேல் அடி. தற்போது அது கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறது.

இருப்பினும் சிட்டியால் தொடர்ந்து சிறப்பாக விளையாட முடியாமல் தடுமாறுகிறது. பிரிமியர் லீக்கில் லிவர்பூலுக்கு எதிராக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் விளையாடிய ஆட்டத்தில் சிட்டி 2-0 என்ற கோல் கணக்கில் தோற்றது.

அதனால் இந்தமுறை தனது முழுபலத்தையும் காட்ட சிட்டி போராடலாம். இது அந்த அணிக்கு நம்பிக்கையைத் தரும் என்று கவனிப்பாளர்கள் கருதுகின்றனர்.

சனிக்கிழமை (பிப்ரவரி 22) மாலை நிலவரப்படி இங்கிலி‌ஷ் பிரிமியர் லீக் புள்ளிப் பட்டியலில் 61 புள்ளிகளுடன் லிவர்பூல் முதலிடத்தில் உள்ளது. இரண்டாம் இடத்தில் 53 புள்ளிகளுடன் ஆர்சனல் அணி இருக்கிறது. 47 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் நாட்டிங்ஹாம் ஃபாரஸ்ட் உள்ளது. சிட்டி 44 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் நீடிக்கிறது.  

குறிப்புச் சொற்கள்