புனே: ஒரே உலகக் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் தொடரில் அதிக சிக்சர்களை அடித்த அணி என்ற சாதனையை முறியடித்துள்ளது தென்னாப்பிரிக்கா.
இந்தியாவில் நடந்துவரும் உலகக் கிண்ணப் போட்டிகளில் அவ்வணி இதுவரை 82 சிக்சர்களைப் பறக்கவிட்டுள்ளது.
நியூசிலாந்து அணிக்கெதிராக புதன்கிழமை நடந்த போட்டியில் மட்டும் தென்னாப்பிரிக்க அணி 15 சிக்சர்களை விளாசியிருந்தது.
முன்னதாக, 2019ஆம் ஆண்டு நடந்த உலகக் கிண்ணத் தொடரில் இங்கிலாந்து அணி 76 சிக்சர்களை அடித்திருந்ததே இதுவரை சாதனையாக இருந்தது.
அதற்கு இங்கிலாந்து அணிக்கு 11 ஆட்டங்கள் தேவைப்பட்டன. ஆனால், இம்முறை ஏழு ஆட்டங்களிலேயே தென்னாப்பிரிக்க அணி அச்சாதனையை முறியடித்துவிட்டது.
இம்முறை ஓர் ஆட்டத்திற்கு 10.2 சிக்சர் என்ற விகிதத்தில் தென்னாப்பிரிக்க அணி சிக்சர்களைப் பறக்கவிட்டுள்ளது.
முதல் சுற்றிலேயே இன்னும் இரண்டு ஆட்டங்கள் எஞ்சியுள்ள நிலையில், இம்முறை 100 சிக்சர்களை அடிக்க தென்னாப்பிரிக்க அணிக்கு அதிக வாய்ப்பு இருப்பதாகச் சொல்லப்படுகிறது.