ஆன்டிகுவா: டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரிலிருந்து வெஸ்ட் இண்டீஸ் அணி வெளியேறியது.
தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக திங்கட்கிழமை நடந்த ‘சூப்பர் 8’ சுற்று ஆட்டத்தில் வென்றால் மட்டுமே வெஸ்ட் இண்டீசால் அரையிறுதிக்குத் தகுதிபெற முடியும் என்ற நிலை.
இந்நிலையில், மழை குறுக்கிட்ட அந்த ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க அணி ‘டக்வொர்த் லூயிஸ்’ முறைப்படி மூன்று விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, இரண்டாம் பிரிவில் முதலிடம் பிடித்து, அரையிறுதிக்கு முன்னேறியது.
முதலில் பந்தடித்த வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் எட்டு விக்கெட்டுகளை இழந்து 135 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக ரோஸ்டன் சேஸ் 42 பந்துகளில் 52 ஓட்டங்களைச் சேர்த்தார்.
இலக்கை விரட்டிய தென்னாப்பிரிக்க அணி, வெஸ்ட் இண்டீசைப் போல தொடக்கத்திலேயே இரு விக்கெட்டுகளைப் பறிகொடுத்தது. அந்நிலையில் மழை குறுக்கிட்டது.
இதனையடுத்து, தென்னாப்பிரிக்க அணி 17 ஓவர்களில் 123 ஓட்டங்களை எடுக்க வேண்டும் என இலக்கு திருத்தியமைக்கப்பட்டது.
மழைக்குப்பின் ஆடுகளத்தின் தன்மை மாறியதால் சுழற்பந்துவீச்சு எடுபடவில்லை. ஆயினும், தென்னாப்பிரிக்க அணியும் சீராக விக்கெட்டுகளை இழந்ததால் கடைசிக் கட்டம் பரபரப்பாக இருந்தது.
கடைசி ஏழு பந்துகளில் ஒன்பது ஓட்டங்கள் எடுக்க வேண்டிய நிலையில், ரபாடா ஒரு பவுண்டரியையும் யான்சன் ஒரு சிக்சரையும் விளாசி, தென்னாப்பிரிக்க அணியை கரை சேர்த்தனர்.
மூன்று விக்கெட்டுகளைச் சாய்த்த தென்னாப்பிரிக்க அணியின் சுழற்பந்துவீச்சாளர் தப்ரைஸ் ஷம்சி ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார்.
முன்னதாக, இரண்டாம் பிரிவிலிருந்து இங்கிலாந்து அணி அரையிறுதிக்குள் நுழைந்துவிட்டது.