லண்டன்: கடந்த 27 ஆண்டுகளாக அனைத்துலக கிரிக்கெட் மன்றம் (ஐசிசி) நடத்திய போட்டித் தொடர்களில் பலமுறை இறுதிவரை சென்றும் ஒருமுறைகூட வெற்றிக்கனியை நுகராத தென்னாப்பிரிக்க அணி, ஒருவழியாக அந்தச் சோகத்தைத் துடைத்தெறிந்தது.
லண்டனில் நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் அவ்வணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியைத் தோற்கடித்து, கிண்ணம் வென்றது.
இம்மாதம் 11ஆம் தேதி புதன்கிழமை தொடங்கிய அந்த ஐந்து நாள் போட்டி, நான்காம் நாளான சனிக்கிழமை முதல் ஆட்ட வேளையிலேயே முடிவிற்கு வந்தது.
முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 212 ஓட்டங்களையும் தென்னாப்பிரிக்க அணி 138 ஓட்டங்களையும் எடுத்தன.
இரண்டாம் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 207 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க, தென்னாப்பிரிக்க 282 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
முதல் இன்னிங்சில் ஓட்டமேதும் எடுக்காமல் ஆட்டமிழந்த தென்னாப்பிரிக்கத் தொடக்க ஆட்டக்காரர் எய்டன் மார்க்ரம் இரண்டாம் இன்னிங்சை அதிரடியாகத் தொடங்கினார். இம்முறை அவர் சதமடித்து (136 ஓட்டங்கள்) தமது அணியின் வெற்றிக்கு உறுதுணையாகத் திகழ்ந்தார். வெற்றிக்கு ஆறு ஓட்டங்களே தேவைப்பட்ட நிலையில் அவர் ஆட்டமிழந்தார்.
மார்க்ரமே ஆட்ட நாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.
அவருக்கு அடுத்தபடியாக, தென்னாப்பிரிக்க அணித்தலைவர் டெம்பா பவுமா 66 ஓட்டங்களைச் சேர்த்தார்.
தொடர்புடைய செய்திகள்
முதல் இன்னிங்சில் மளமளவென விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 74 ஓட்டங்கள் பின்தங்கியபோதும், இரண்டாம் இன்னிங்சில் தென்னாப்பிரிக்க அணி எழுச்சியுடன் ஆடி வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது.
கடைசியாக, 1998ஆம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியைத் தென்னாப்பிரிக்க அணி வென்றிருந்தது.