தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஒலிம்பிக்கில் குளறுபடி; தென்கொரியா வருத்தம்

1 mins read
e47f17bc-4a11-42be-85e2-85d70a8904a3
பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் தென்கொரிய விளையாட்டாளர்களைச் சுமந்து செல்லும் படகு. - படம்: இபிஏ

சோல்: பாரிசில் வெள்ளிக்கிழமை இரவு (ஜூலை 26) இடம்பெற்ற ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் 2024 தொடக்க விழாவில் தென்கொரிய விளையாட்டாளர்கள் தவறுதலாக வடகொரிய விளையாட்டாளர்கள் என அறிமுகப்படுத்தப்பட்டனர்.

இதனால் வருத்தமடைந்துள்ள தென்கொரியா, இனிமேல் இத்தகைய தவறு நிகழாது என உறுதியளிக்கும்படி போட்டி ஏற்பாட்டாளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

செய்ன் ஆற்றின் வழியாக தென்கொரிய வீரர்கள் இடம்பெற்றிருந்த படகு சென்றபோது, அவர்களை வடகொரிய வீரர்கள் என அறிவிப்பாளர் தவறுதலாக அறிமுகப்படுத்தினார்.

வடகொரிய விளையாட்டாளர்களின் படகு சென்றபோதும் அவர் அவ்வாறே குறிப்பிட்டார்.

இதனையடுத்து, பாரிஸ் சென்றிருக்கும் தென்கொரியா விளையாட்டு, கலாசார இணை அமைச்சர் ஜேங் மி ரன், அனைத்துலக ஒலிம்பிக் மன்றத்தின் தலைவர் தாமஸ் பாக்கைச் சந்திக்க முயன்று வருகிறார்.

தென்கொரிய ஒலிம்பிக் மன்றமும் உடனடியாக இத்தவறு குறித்து போட்டி ஏற்பாட்டாளர்களின் கவனத்திற்குக் கொண்டுசென்றது. இனிமேல் அத்தகைய தவறு நிகழாமல் பார்த்துக்கொள்ளுமாறும் அம்மன்றம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இம்முறை 21 போட்டிகளில் பங்குகொள்வதற்காக 143 விளையாட்டாளர்களைத் தென்கொரியா அனுப்பியுள்ளது. 2016ஆம் ஆண்டிற்குப் பிறகு மீண்டும் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் வடகொரியா 16 விளையாட்டாளர்களை அனுப்பியுள்ளது.

தற்பொழுது இந்த தவற்றுக்காக அனைத்துலக ஒலிம்பிக் மன்றம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டுள்ளது. எக்ஸ் தளத்தில் இது குறித்து பதிவிட்ட அனைத்துலக ஒலிம்பிக் மன்றம், “தொடக்க விழாவில் தென்கொரியக் குழுவை அறிமுகப்படுத்துவதில் ஏற்பட்ட தவற்றுக்கு மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறோம்,” என்று தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்