2026 உலகக் கிண்ணத்தை ஸ்பெயின் வெல்லும்: மைக்கேல் ஓவன் கணிப்பு

2026 உலகக் கிண்ணத்தை ஸ்பெயின் வெல்லும்: மைக்கேல் ஓவன் கணிப்பு

2 mins read
7f0e9ae1-468e-42b5-97d5-57212cedb79d
முன்னாள் இங்கிலாந்து, லிவர்பூல் அணியின் முன்கள ஆட்டக்காரரான மைக்கேல் ஓவன் - படம்: டி. கவிந்திரன்

ரிசார்ட்ஸ் வோர்ல்டு செந்தோசாவில் கடந்த வியாழக்கிழமை (ஜூலை 16) நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஓவன், நடப்பு உலக கிண்ணக் காற்பந்துப் போட்டி குறித்த தமது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்.

“ஸ்பெயின்தான் உலகக் கிண்ணத்தை வெல்லும்,” என்று அவர் உறுதியாகக் கூறினார். 

நெருக்கடியான சூழ்நிலைகளில் ஒரு சிறந்த அனைத்துலக அணி எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை ஸ்பெயின் மெய்ப்பித்துக் காட்டியுள்ளதாக ஓவன் கருதுகிறார்.

அட்வென்ச்சர் கோவ் வாட்டர்பார்க்கில் சனிக்கிழமை (ஜூலை 18) முன்னாள் சிங்கப்பூர் காற்பந்து வீரர் ஃபாண்டி அகமதுடன் இணைந்து ரிசார்ட்ஸ் வோர்ல்டு செந்தோசாவின் ‘பிரேக்பாஸ்ட் வித் தி லெஜண்ட்ஸ்’ அவர் முதன்மை விருந்தினராகப் பங்கேற்றார். 

அர்ஜென்டினா சில சாதகமான சூழ்நிலைகளால் பயனடைந்துள்ளது என்பது ஓவனின் கருத்து.

“அர்ஜென்டினா ஒரு நல்ல அணி. அது முற்றிலும் உண்மை. ஆனால், அது ஒரு சிறந்த அணியன்று,” என்றார் ஓவன்.

அரையிறுதியில் இங்கிலாந்தின் வீழ்ச்சிக்கு முன்பு, கேப் வெர்டே, எகிப்து ஆகிய அணிகளுக்கு எதிராக அர்ஜென்டினா போராடிப் பெற்ற வெற்றிகளை அவர் சுட்டிக்காட்டினார்.

32 அணிகள் பங்கேற்ற இரண்டாம் சுற்றில் அமெரிக்க வீரருக்கு வழங்கப்பட்ட சிவப்பு அட்டையை அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தலையிட்டு ரத்து செய்தது, ஒழுங்கு விளையாட்டு முறைக்கு ஏற்புடையதன்று என்று ஓவன் கருதுகிறார்.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

“அது காற்பந்து விளையாட்டுக்குமிகுந்த பாதிப்பை ஏற்படுத்தியதாக நான் நினைக்கிறேன்,” என்றார் அவர்.

இருப்பினும், இக்காலத்தில் நடுவர்களின் பணி கடினமாகிவிட்டதாகக் கூறி, அவர் அனைத்து நடுவர்களுக்கும் ஆதரவாகப் பேசினார்.

“இங்கிலாந்து-அர்ஜென்டினா போட்டியின் நடுவர் மிகவும் அற்புதமாகச் செயல்பட்டார் என்று நான் நினைக்கிறேன்,” என்று அவர் குறிப்பிட்டார். 

“ தோல்வி அடைந்துவிடுவோமோ என்ற அச்சம் இங்கிலாந்துக்கு இருந்தது,” என்று கூறி, அர்ஜென்டினாவுக்கு எதிராக இங்கிலாந்து 1-2 என்ற கோல் கணக்கில் தோற்றது குறித்து ஓவன் விளக்கினார்.

ஜெர்மனியைச் சேர்ந்த இங்கிலாந்து அணியின் பயிற்றுவிப்பாளர் தாமஸ் டுக்கலின்மீது அவர் அந்தத் தோல்விக்கான பெரும்பொறுப்பைச் சுமத்தினார்.

இங்கிலாந்தின் தோல்விக்கு முன்பே தேசிய அணிகளுக்கு வெளிநாட்டவர்களைப் பயிற்றுநர்களாகவும் மேலாளர்களாகவும் நியமிப்பதை நீண்டகாலமாகத் தாம் எதிர்த்து வருவதைத் ஓவன் மீண்டும் சுட்டினார்.

வழக்கமான 32 அணிகளிலிருந்து 48 அணிகளுக்கு அதிகரிக்கப்பட்ட இவ்வாண்டின் உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டி கூடுதல் விவாதங்களை ஏற்படுத்தியிருந்தாலும் பல நாடுகள் காற்பந்தை உலக மேடையில் விளையாடும் வாய்ப்பைப் பெற்றுள்ளன என்பது குறித்து ஓவன் மகிழ்ச்சி தெரிவித்தார்.

குறிப்பாக, ஆசிய நாடுகள் நாளடைவில் பயனடையும் என்று அவர் நம்புகிறார்.

“படிப்படியாக ஆசிய அணிகள் காற்பந்து விளையாட்டில் மேம்பட்டு வருவதை நான் கண்டு வருகிறேன்,” என்று அவர் சொன்னார். 

குறிப்புச் சொற்கள்
காற்பந்துஉலகக் கிண்ணம்காற்பந்து வீரர்