நியூஜெர்சி: அர்ஜென்டினாவை வீழ்த்தி உலகக் கிண்ணத்தை வென்றுள்ளது ஸ்பெயின். 16 ஆண்டுகளுக்குப் பிறகு, ஸ்பெயின் மீண்டும் உலகக் கிண்ண வெற்றியாளராக வாகை சூடியுள்ளது.
அமெரிக்காவின் நியூ ஜெர்சி நகரத்தின் மெட்லைஃப் விளையாட்டரங்கில் திங்கட்கிழமை (ஜூலை 20) நடைபெற்ற ஆட்டத்தில் 1-0 எனும் கோல் கணக்கில் அது விருதைத் தற்காக்க முயன்ற அர்ஜென்டினாவை வீழ்த்தியது.
ஆட்டத்தில் ஸ்பெயின் ஆதிக்கம் செலுத்தியது. முற்பாதியில் கோல் இல்லை. பிற்பாதியில் தப்பாட்டம் காரணமாக அர்ஜென்டினாவின் என்ஸோ ஃபெர்னான்டசுக்குச் சிவப்பு அட்டை கொடுக்கப்பட்டது. பிற்பாதியிலும் கோல் இல்லை.
ஆட்டம் கூடுதல் நேரத்திற்குச் சென்றது. 106வது நிமிடத்தில் ஃபெர்ரான் டோரெஸ் போட்ட கோல் ஸ்பெயினை வெற்றிக்கு இட்டுச் சென்றது.
பின்னர் எவ்வளவு முயன்றும் அர்ஜென்டினாவால் ஆட்டத்தைச் சமன்படுத்தமுடியவில்லை.
வெற்றிக் கொண்டாட்டத்தில் மூழ்கியது ஸ்பெயின். கிண்ணத்தை இழந்த நிலையில் வீட்டுக்குத் திரும்புகிறது அர்ஜென்டினா.
இதற்கிடையே, ஸ்பெயினின் வெற்றியை அந்நாட்டு மக்கள் ஆடிப்பாடிக் கொண்டாடி வருகின்றனர். ஐபீரியா விமானப் பயணிகளுக்கு ஸ்பெயினின் தேசிய கீதம் ஒலிபரப்பப்பட்டது. மட்ரிட் விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியதும் விமானி, தாங்களே உலகக் கிண்ண வெற்றியாளர்கள் என்பதைப் பயணிகளிடம் தெரிவித்து மகிழ்ந்தார்.
மட்ரிட்வாசிகளுக்கு அதிகத் தூக்கம் இருந்திருக்காது. நள்ளிரவுவாக்கில் கொண்டாட்டம் சூடுபிடிக்கத் தொடங்கியதால், பலர் தூங்கவில்லை.
மக்களில் அதிகமானோர், ஸ்பானியக் குழுவினரின் ஆடையை அணிந்து, நாட்டுப்பற்றை வெளிப்படுத்தினர்.
வெற்றிக் கிண்ணத்துடன் நாடு திரும்பும் வீரர்களை வரவேற்க ஏறக்குறைய ஒரு மில்லியன் பேர் தயாராகி வருகின்றனர். கூடுதல் பாதுகாப்பு, போக்குவரத்து வசதிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வேளையில், அர்ஜென்டினாவில் மக்களின் வாழ்க்கை மெதுவாக வழக்கநிலைக்குத் திரும்புகிறது. தங்கள் அணி தோல்வியுற்ற பிறகு பலரும் மதுக்கூடங்களிலிருந்தும் விளையாட்டைப் பார்வையிட்ட இடங்களிலிருந்தும் அமைதியாக வீடுகளுக்குத் திரும்பினர். ஸ்பெயின் சிறப்பாக விளையாடியதைப் பலர் ஒப்புக்கொண்டனர். இந்த உலகக் கிண்ணத்தின் அரையிறுதியில் இங்கிலாந்தை வென்றதே தங்களுக்குப் போதுமானது என்று அவர்கள் கூறினர்.

