பெர்லின்: நேஷன்ஸ் லீக் காற்பந்து கிண்ணத்தின் இறுதியாட்டத்தில் போர்ச்சுகலும் ஸ்பெயினும் மோதவுள்ளன.
ஆட்டம் ஜெர்மனியின் அலியான்ஸ் அரினா விளையாட்டரங்கில் நடக்கிறது.
சிங்கப்பூர் நேரப்படி திங்கட்கிழமை (ஜூன் 9) பின்னிரவு 3 மணிக்கு ஆட்டம் நடக்கவுள்ளது.
2019ஆம் ஆண்டு இந்த நேஷன்ஸ் லீக் காற்பந்துப் போட்டி தொடங்கப்பட்டது. அந்த ஆண்டு போர்ச்சுகல் வெற்றிபெற்றது.
தற்போது நடப்பு வெற்றியாளராக உள்ள ஸ்பெயின் கிண்ணத்தைத் தக்கவைத்துக்கொள்வதில் அதிகக் கவனம் செலுத்தி வருகிறது. நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ மீண்டும் நேஷன்ஸ் லீக் கிண்ணத்தை வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் உள்ளார்.
அவருக்கு ஸ்பெயினின் வளர்ந்து வரும் இளம் நட்சத்திர வீரர் லாமின் யமால் பெரிய அளவில் போட்டியாக விளங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
17 வயது யமாலின் வேகத்திற்கு ஈடாக 40 வயது ரொனால்டோ செயல்படுவாரா என்பதைக் காணக் காற்பந்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
அரையிறுதியில் போர்ச்சுகல் ஜெர்மனியை 2-1 என்று வீழ்த்தியது. இந்த ஆட்டத்தில் பெரும்பாலான நேரம் போர்ச்சுகல் அசத்தலாக விளையாடியது. ரொனால்டோவும் கோல் அடித்தார்.
தொடர்புடைய செய்திகள்
மறுபக்கம் ஸ்பெயின் பிரான்சை 5-4 என்று தோற்கடித்தது. முதலில் 4-0 பின்னர் 5-1 என்று முன்னிலையில் இருந்த ஸ்பெயின் கடைசி நேரத்தில் சுமாராக விளையாடியது.
இதைப் பயன்படுத்திய பிரான்ஸ் வேகமாக மூன்று கோல்கள் அடித்தது. இறுதியில் ஆட்டத்தைப் போராடி வென்றது ஸ்பெயின்.
அரையிறுதி போல் இல்லாமல் ஸ்பெயின் போர்ச்சுகலுக்கு கடினமான சவாலைக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.