பெட்டாலிங் ஜெயா: மலேசியாவின் நெகிரி செம்பிலான் காற்பந்துக் குழுவிற்காக விளையாடி வரும் ஸ்பானிய வீரர் மிகெல் ஆங்கல் ஜங்கோ மார்ட்டினஸ் வழிப்பறிக் கொள்ளையர்களிடம் விலைமதிப்புமிக்க பொருளைப் பறிகொடுத்தார்.
இச்சம்பவம் கோலாலம்பூரில் ஞாயிற்றுக்கிழமையன்று (ஜூன் 30) நிகழ்ந்தது.
மோட்டார்சைக்கிளில் வந்த கொள்ளையர்கள் தம்மிடமிருந்து தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றதாக இன்ஸ்டகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார், ரசிகர்களால் ‘மிக்கா’ என்றழைக்கப்படும் மார்ட்டினஸ்.
அண்மைக்காலமாக மலேசியாவில் காற்பந்து வீரர்கள் சிலர் இத்தகைய இன்னல்களை எதிர்கொண்ட நிலையில், “இதற்கெல்லாம் யாராவது முடிவுகட்ட வேண்டும்,” என்று மிக்கா தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
மிக்காவிடம் வழிப்பறி செய்ததை உறுதிப்படுத்திய நெகிரி செம்பிலான் காற்பந்துக் குழு, அச்சம்பவத்தில் அவர் காயமின்றித் தப்பியதாகவும் தெரிவித்தது. இதன் தொடர்பில் காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்ற மாதம் திரெங்கானு காற்பந்துக் குழுவின் அக்யர் ரஷீத் பயிற்சியை முடித்துவிட்டுத் திரும்பியபோது கொள்ளையர்கள் இருவரால் தாக்கப்பட்டார். அதுபோல, கடைத்தொகுதி ஒன்றில் சிலாங்கூர் காற்பந்துக் குழுவின் ஃபைசால் ஹலீம்மீது அமிலம் வீசப்பட்டதில், அவர் கடுமையாகக் காயமுற்றார்.
இதனிடையே, ஜோகூர் டாருல் தக்சிம் குழு ஆட்டக்காரர் சஃபிக் ரகீமின் கார் கண்ணாடி அடையாளம் தெரியாதவர்களால் உடைக்கப்பட்டது.
இம்மூன்று சம்பவங்கள் தொடர்பிலும் காவல்துறை இன்னும் எவரையும் கைதுசெய்யவில்லை என்று ‘ஃபிரீ மலேசியா டுடே’ செய்தி தெரிவித்தது.


