தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளில் (சீ கேம்ஸ்) கலந்துகொண்டு வெற்றிகரமாகத் திரும்பிய விளையாட்டாளர்களுக்குச் சிங்கப்பூரில் ராஜ மரியாதையுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
சாங்கி விமான நிலையத்தில் திரண்ட ஆதரவாளர்கள் அவர்களுக்கு மாலை அணிவித்து கெளரவித்தனர்.
வியாழன், வெள்ளி, சனிக்கிழமைகளில் முறையே கிரிக்கெட், கபடி, நீர் விளையாட்டு அணிகளை வரவேற்கத் தமிழ் முரசு செய்தியாளர்களும் சென்றிருந்தனர்.
இவ்வாண்டு தென்கிழக்காசிய விளையாட்டுகளில் சிங்கப்பூர் கைப்பற்றிய 52 தங்கப் பதக்கங்களில் 22, நீர் விளையாட்டு அணிகள் பெற்றுத் தந்தவை.
தன் அணியை வெற்றிக்கு வழிநடத்திச் சென்றார் முதன்முறையாகச் சிங்கப்பூர் நீர்ப்பந்து (வாட்டர்போலோ) ஆண்கள் அணிக்குத் தலைவராகப் பொறுப்பேற்ற சஞ்ஜிவ் இராஜேந்திரா, 23. இவர், ‘சீ கேம்ஸ்’ போட்டிகளில் கலந்துகொள்வது இதுவே முதல் முறை.
இந்தோனீசியாவைச் சிங்கப்பூர் அணி 19-16 என வெற்றிகண்டு தங்கத்தைக் கைப்பற்றியது. அதற்குமுன், தாய்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 14-13 எனச் சிங்கப்பூர் வாகைசூடியிருந்தது. 30 ‘சீ கேம்ஸ்’ விளையாட்டுகளில் இது, சிங்கப்பூர் ஆண்கள் அணி நீர்ப்பந்தாட்டத்தில் வென்றுள்ள 29வது தங்கம்.
“எங்கள் அணி, வாரத்துக்கு 30 மணி நேரம் பயிற்சி செய்ய வழிவகுக்கும் மேம்படுத்தப்பட்ட பயிற்சித் திட்டத்தைத் தொடங்கியுள்ளது. அது இல்லாமல் இந்த வெற்றி சாத்தியமில்லை,” என்றார் சஞ்ஜிவ். விளையாட்டுகளை நேரில் காணச் சென்றிருந்த அவரது குடும்பத்தினர், போட்டிகளின்போது பதற்றமாக இருந்ததாகவும் பின்னர் வெற்றி கிட்டியதில் மகிழ்ந்ததாகவும் கூறினர்.
பெண்கள் நீர்ப்பந்து அணி, தாய்லாந்துடனான போட்டியில் 11-8 எனத் தோல்வியுற்று வெள்ளிப் பதக்கத்தை வென்றது. அணியின் கோல்காப்பாளர் டாக்டர் மெளனிஷா தேவிக்கு இது மூன்றாவது ‘சீ கேம்ஸ்’. அவர் இப்போட்டிக்குத் தயார்செய்வதற்காகவே நான்கு மாதங்களாகச் சம்பளம் இல்லா விடுப்பு எடுத்திருந்தார்.
தொடர்புடைய செய்திகள்
தங்கத்தை எட்டமுடியவில்லையே என்ற வருத்தம் இருந்தாலும், “எங்களால் இயன்றவரை நன்றாக விளையாடினோம். அடுத்தமுறை நிச்சயம் தங்கம் வெல்வோம் என்ற நம்பிக்கை உண்டு,” என்றார் டாக்டர் மெளனிஷா.
கபடி அணிகளுக்கு மாபெரும் வரவேற்பு
முதன்முறையாகத் தென்கிழக்காசிய விளையாட்டுகளில் பங்கேற்று ஆறு வெண்கலப் பதக்கங்களுடன் திரும்பிய ஆண், பெண் கபடி அணிகளுக்கு மூன்று பெரிய பதாகைகள், ஒலிபெருக்கியில் இசையுடன் மாலைகள் அணிவித்து, கேக் வெட்டி ஆதரவாளர்கள் ஆரவாரத்துடன் வரவேற்றனர். பயிற்றுவிப்பாளர்களுக்குப் பொன்னாடை போர்த்திக் கொண்டாடினர்.
கபடி அணிகள் எட்டு தேசியச் சாதனைகள் படைத்துள்ளன. ‘அணிக்கு எழுவர்’ போட்டியில் முதலில் ராஜா ஸ்ரீராம் 15 புள்ளிகளும் அன்பு நவின் 17 புள்ளிகளும் பெற்று, தாக்குதலுக்கான தேசியச் சாதனைகள் படைத்தனர். அணித் தலைவர் விஷ்வ தேவா, தற்காப்பில் ஒன்பது புள்ளிகள் பெற்றுச் சாதனை படைத்தார்.
‘சூப்பர் 5’ போட்டியில் மலேசியாவை எதிர்த்து, தாக்குதல் ஆட்டக்காரர் கோகுல் கண்ணன், 14 நிமிடங்களில் 16 புள்ளிகள் எடுத்தும், தற்காப்பு ஆட்டக்காரர் சாய் நிகிலேஷ் ஏழு புள்ளிகள் பெற்றும் சாதனைகள் படைத்தனர். ‘அணிக்கு மூவர்’ போட்டியில் அணித் தலைவர் ஐடில், 13 புள்ளிகள் பெற்றும் விஷ்வ தேவா தற்காப்பு ஆட்டத்தில் பத்துப் புள்ளிகள் பெற்றும் சாதனை படைத்தனர்.
“அனுபவமிக்க எதிர்த்தரப்பினருடன் சரிக்குச் சமமாக விளையாடினர். நம் விளையாட்டாளர்கள் ஆண்டு முழுவதும் நன்கு பயிற்சி செய்தனர்,” என்றார் பயிற்றுவிப்பாளர் சிவநேசன்.
கிரிக்கெட் அணிகளுக்கு அமோக வரவேற்பு
ஆண்கள் கிரிக்கெட் அணி டி20, டி10 இரு போட்டிகளிலும் வெண்கலம் வென்று வெற்றியுடன் திரும்பியது. பெண்கள் கிரிக்கெட் அணி பதக்கம் வெல்லாவிட்டாலும் நல்ல அனுபவத்துடன் திரும்பியது. இளம் விளையாட்டாளர்கள் கடினமான போட்டிகளில் தம் திறனைக் காட்டினர்.
டி20 போட்டியில் தாய்லாந்தை நான்கு ஓட்ட வித்தியாசத்தில் வென்றது சிங்கப்பூர். நீல் கார்னிக் கடைசி ஓவரில் எதிரணியின் முன்னணிப் பந்தடிப்பாளரை வெளியேற்றி வெற்றிக்கு வழிவகுத்தார்.
இந்தோனீசியாவுக்கு எதிராக, ராவுல் ஷர்மா 20 பந்துகளில் அடித்த 38 ஓட்டங்கள் மூலம் சிங்கப்பூர் 155 ஓட்டங்களுடன் வெற்றிகண்டது.
டி10 போட்டியில் தொடக்க ஆட்டக்காரர் மஹியு பாட்டியா, இருமுறை விரைவான தொடக்கங்கள் தந்தார். அவர் இந்தோனீசியாவுக்கு எதிராக 18 பந்துகளில் 34 ஓட்டங்களைக் குவித்தார். தாய்லாந்துக்கு எதிராகவும், மஹியு பாட்டியா 31 ஓட்டங்களும், அமான் தேசாய் 28 ஓட்டங்களும் எடுத்தனர்.
இந்தோனீசியாவுக்கு எதிராகப் பத்து ஓவர்களில் 78 ஓட்டங்கள் குவித்தது சிங்கப்பூர். இந்தோனீசியாவால் 61 ஓட்டங்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
பிலிப்பீன்சுக்கு எதிராக, கண்ணுசாமி சதீஷ் 25 பந்துகளில் 53 ஓட்டங்களும், ராவுல் ஷர்மா 22 பந்துகளில் 38 ஓட்டங்களும் எடுத்து 121 எனும் ஓட்ட இலக்கை எட்டினர்.
ஆனால் தாய்லாந்து, மலேசியாவுக்கு எதிராகச் சிங்கப்பூர் அணியால் வெற்றிபெற முடியவில்லை.
சிங்கப்பூர் கிரிக்கெட் சங்கத் தலைவர் மாமூத் கஸ்னாவி, “விளையாட்டாளர்களுக்கு இருந்த பயிற்சி வாய்ப்புகளுடன் அவர்கள் தம் தலைசிறந்த பங்களிப்பை அளித்தனர்,” என்றார்.
“ஒவ்வொரு விளையாட்டாளரும் சிறப்பாகச் செய்தார். முழு போட்டியிலும் நாங்கள்தான் ஆக இளையவர்கள். ஆனால் ஒவ்வொருவரும் சிறப்பாக விளையாடிய விதம் மிகவும் பாராட்டத்தக்கது,” என்றார் ராவுல் சர்மா.
ஓராண்டுக்கு மேலாக வெஸ்ட் கோஸ்ட் பயிற்சித் திடலில் கிரிக்கெட் அணிகள் பயிற்சி செய்துவந்தாலும் திடலில் தகுந்த மின்விளக்குகளை நிறுவுவதில் சிரமங்கள் இருப்பதால் இரவில் அங்குப் பயிற்சி செய்ய முடியவில்லை என்று அவர் கூறினார். “நம் விளையாட்டாளர்களில் பெரும்பாலோர் வேலை செய்பவர்கள் அல்லது படிப்பவர்கள். அவர்களால் பகல் நேரத்தில் பயிற்சி செய்யமுடியவில்லை,” என்றார் திரு கஸ்னாவி.
ஒரு மாதமாகச் சிங்கப்பூர் இந்தியர் சங்கக் கிரிக்கெட் திடலில் இரவிலும் அணி பயிற்சி மேற்கொண்டது. எனினும், அடிக்கடி மழை வந்ததால் அத்திடலை அவ்வளவாகப் பயன்படுத்த இயலவில்லை. காற்பந்து அணிகளுடன் திடலைப் பகிர்வதும் ஒரு சவாலே என்றார் திரு கஸ்னாவி.
“நாங்கள் ஓர் இளம் அணியுடன் இவ்விளையாட்டுகளில் பங்கேற்றோம். நாங்கள் 2029 சீ கேம்ஸைக் குறிவைக்கிறோம்,” என்றார் பெண்கள் அணித் தலைவர் ஷஃபினா மஹேஷ்.

