தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

லிவர்பூலையும் சாய்க்க இலக்கு; தத்தளிக்கும் ஸ்பர்ஸ்

2 mins read
4cd1061e-5087-44b7-8a08-58e0dee4708f
லிவர்பூல் நிர்வாகி ஆர்ன ஸ்லொட். - படம்: ராய்ட்டர்ஸ்
multi-img1 of 2

லண்டன்: அண்மையில் இரண்டு போட்டிகளில் மான்செஸ்டர் சிட்டியை வென்று அதிர்ச்சி தந்த டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர் இப்போது இங்கிலி‌ஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் பட்டியலில் முதலிடத்தை வகிக்கும் லிவர்பூலையும் வெல்லும் இலக்கைக் கொண்டுள்ளது.

லீக்கில் லிவர்பூல் கொடிகட்டிப் பறந்துகொண்டிருக்கிறது. ஸ்பர்ஸ், அடுத்து எப்படி விளையாடும் என்று கணிக்க முடியாத நிலையில் இருக்கிறது. எதிர்பாரா வேளைகளில் வெல்வதும் தோல்வியடைவதுமாக ஸ்பர்ஸ் இருந்து வருகிறது.

சென்ற வாரம் ஈஎஃப்எல் (EFL) கிண்ணப் போட்டியில் அக்குழு, மான்செஸ்டர் யுனைடெட்டை 4-3 எனும் கோல் கணக்கில் வென்றது. லீக்கிலும் இப்பருவம் யுனைடெட்டை வென்றது.

ஈஎஃப்எல் கிண்ணப் போட்டியில் மான்செஸ்டர் சிட்டியை வென்றதுடன் நின்றுவிடாமல் லீக்கில் அக்குழுவை 4-0 எனும் கோல் கணக்கில் புரட்டிப்போட்டது ஸ்பர்ஸ். அதேவேளை, எளிதாக வெல்லக்கூடியதாகக் கருதப்படும் குழுக்களுக்கு எதிராக ஸ்பர்ஸ் தடுமாறியிருக்கிறது.

ஸ்பர்சும் லிவர்பூலும் ஞாயிற்றுக்கிழமையன்று (டிசம்பர் 22) லீக்கில் சந்திக்கின்றன. ஆட்டத்தை முன்னிட்டு லிவர்பூல் நிர்வாகி ஆர்ன ஸ்லொட், தான் ஸ்பர்ஸ் நிர்வாகி ஆஞ்சி பொஸ்டக்கொக்லுவின் ரசிகர் எனக் கூறியுள்ளார்.

தாக்குதல் ஆட்டத்தில் அளவுக்கதிகமான கவனம் செலுத்துவதாக சில தரப்பினர் பொஸ்டக்கொக்லுவை சாடி வருகின்றனர். அதுபற்றிக் கருத்துரைத்த ஸ்லொட், “(அந்த விளையாட்டு) உங்களை உற்சாகப்படுத்தவில்லையா,” என்று செல்லமாகக் கேட்டார்.

நிர்வாகியாக பொஸ்டக்கொக்லு பின்பற்றும் அணுகுமுறையில் தனக்கு மிகுந்த நம்பிக்கை இருப்பதாகவும் ஸ்பர்ஸ் விளையாடும் விதம் உற்சாகம் தரும் வகையில் விறுவிறுப்பாக இருப்பதாகவும் ஸ்லொட் சொன்னார்.

“அளவுக்கதிகமாக தாக்குதல் ஆட்டத்தில் கவனம் செலுத்துவது எப்படி சாத்தியமாகும்?” என்றும் ஸ்லொட் எடுத்துரைத்தார். அதோடு, லீக் விருதை எந்தக் குழு வெல்லும் என்பதை இப்போதே கணிக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள மற்றோர் ஆட்டத்தில், படிப்படியாக முன்னேறிவந்து லீக் விருதுக்குப் போட்டி தரும் நிலையில் இருக்கும் செல்சி, எவர்ட்டனைச் சந்திக்கிறது. சென்ற வாரம் எதிர்பாரா விதமாக மான்செஸ்டர் சிட்டியை வென்ற மான்செஸ்டர் யுனைடெட்டுடன் மோதுகிறது போர்ன்மத்.

இதர லீக் ஆட்டங்களில் ஃபுல்ஹமும் சவுத்ஹேம்ப்டனும் சந்திக்கின்றன, லெஸ்டர் சிட்டி, வுல்வர்ஹேம்ப்டன் வாண்டரர்சுடன் மோதுகிறது.

குறிப்புச் சொற்கள்