தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

துயரத்திலிருந்து மீள நினைக்கும் ஸ்பர்ஸ்

2 mins read
d2660b25-2f72-43f1-b169-8e639ae7ca79
லிவர்பூலுக்கு எதிரான லீக் கிண்ணப் போட்டியின் அரையிறுதியாட்டத்தில் டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர் விளையாட்டாளர்கள் (வெள்ளை, நீல நிறச் சீருடை). - படம்: ஏஎஃப்பி
multi-img1 of 2

பர்மிங்ஹம்: தற்போதைய இங்கிலாந்துக் காற்பந்துப் பருவத்தில் டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர் குழு பெரும் சரிவை எதிர்கொண்டு வந்துள்ளது.

நிர்வாகி ஏஞ்சி பொஸ்டக்கொக்லுவின் தலைமையில் விறுவிறுப்பாக விளையாடும் குழு என்ற பெருமை ஸ்பர்சுக்கு இருந்தது. இப்போது அந்த நற்பெயர் காற்றில் பறந்தோடிவிட்டது போன்ற உணர்வுதான் மிஞ்சியுள்ளது.

இங்கிலி‌ஷ் பிரிமியர் லீக்கில் படுமோசமாக விளையாடி வந்துள்ள ஸ்பர்ஸ், சென்ற வாரம் லீக் கிண்ணப் போட்டியின் அரையிறுதிச் சுற்றில் வெளியேறியது. இப்போது எஃப்ஏ கிண்ணத்தை வெல்லும் வாய்ப்பைத் தக்கவைத்துக்கொள்ளும் முயற்சியில் இறங்கியுள்ளது.

எஃப்ஏ கிண்ணப் போட்டியின் நான்காம் சுற்று ஆட்டத்தில் சக பிரிமியர் லீக் குழுவான ஆஸ்டன் வில்லாவைச் சந்திக்கவுள்ளது ஸ்பர்ஸ். வில்லா, சென்ற பருவம் விளையாடியதைக் காட்டிலும் பிரிமியர் லீக்கில் சுமாராகத்தான் விளையாடி வந்துள்ளது. அதேவேளை, பல ஆண்டு இடைவெளிக்குப் பிறகு ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக்கில் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

அப்படிப்பட்ட வில்லாவை வெல்லவேண்டிய கட்டாயத்தில் உள்ளது ஸ்பர்ஸ்.

ஒரு காலத்தில் இங்கிலாந்தின் தலைசிறந்த குழுக்களில் ஒன்றாகத் திகழ்ந்த ஸ்பர்ஸ் கடந்த பல ஆண்டுகளாகக் களையிழந்து காணப்படுகிறது. அவ்வப்போது நம்பிக்கை தரும் வண்ணம் விளையாடினாலும் தொடர்ந்து சிறப்பாக ஆட முடியாமல் தவிக்கிறது.

ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள மற்றோர் எஃப்ஏ கிண்ண ஆட்டத்தில் லிவர்பூல், பிலிமத் ஆர்கைலைச் சந்திக்கிறது. பிரிமியர் லீக்கில் முதலிடத்தில் இருக்கும் லிவர்பூலுக்கு பிரிமியர் லீக்குக்கு அடுத்த நிலையில் இருக்கும் சாம்பியன்‌ஷிப்பில் போட்டியிடும் பிலிமத் ஒரு பொருட்டாக இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிங்கப்பூர் நேரப்படி சனிக்கிழமை (பிப்ரவரி 8) அதிகாலை நடைபெற்ற எஃப்ஏ கிண்ண நான்காம் சுற்று ஆட்டத்தில் சிரமப்பட்டு லெஸ்டர் சிட்டியை வென்றது மான்செஸ்டர் யுனைடெட்.

2-1 எனும் கோல் கணக்கில் யுனைடெட் வென்றது. ஜோ‌‌ஷுவா ஸெர்க்ஸீ, ஹேரி மெகுவாயர் ஆகியோர் யுனைடெட்டின் கோல்களைப் போட்டனர்.

அந்த ஆட்டத்தில் லெஸ்டர்தான் முதலில் முன்னுக்குச் சென்றது.

குறிப்புச் சொற்கள்