லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்தில் பரம வைரிகளான டாட்டன்ஹம் ஹாட்ஸ்பரும் ஆர்சனலும் மோதவுள்ளன.
பொதுவாக இவ்விரு குழுக்களும் மோதும்போது ஆட்டம் விறுவிறுப்பாக இருப்பது வழக்கம். பல வேளைகளில் கோல் மழையும் பொழியும்.
சிங்கப்பூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 15) இரவு ஒன்பது மணிக்கு நடைபெறவிருக்கும் இந்த ஆட்டம் ஸ்பர்சின் டாட்டன்ஹம் ஹாட்ஸ்பர் ஸ்டேடியம் விளையாட்டரங்கில் நடக்கும். கடந்த சில ஆண்டுகளாக இந்த ஆட்டத்தில் சொந்த மண்ணில் விளையாடும் குழுதான் அதிகமுறை வென்றிருப்பதாக ஆர்சனலின் அதிகாரத்துவ இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், கடந்த இரு ஆண்டுகளாக ஆர்சனல்தான் மிகச் சிறப்பாக விளையாடி வந்துள்ளது. ஸ்பர்ஸ், கணிக்க முடியாத வகையில் விளையாடி வருகிறது.
ஸ்பர்சுக்கு எதிரான ஆட்டத்தில் ஆர்சனல் அணித்தலைவர் மார்ட்டின் ஓடகார்ட் விளையாடுவாரா மாட்டாரா என்பது சந்தேகமாக உள்ளது. சென்ற வாரம் தனது தேசிய அணியான நார்வேக்கு விளையாடும்போது அவர் காயமுற்றார்.
ஓடகார்டைப் பற்றிப் பேசிய ஆர்சனல் நிர்வாகி மிக்கெல் அர்ட்டெட்டா, “அவரின் காயம் எவ்வளவு மோசமாக உள்ளது, அவரை எவ்வளவு சீக்கிரம் மீண்டும் களமிறக்கலாம் ஆகியவற்றை ஆராய்வோம். அவர் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறார். மார்ட்டினைப் பற்றி எங்களுக்கு நன்றாகத் தெரியும். ஒவ்வொரு நாளும் விளையாடவேண்டும் என்று விரும்புபவர். எனினும், பொருத்திருந்துதான் பார்க்கவேண்டும்,” என்று விளக்கினார்.
ஆர்சனலில் புதிதாகச் சேர்ந்திருக்கும் ரஹீம் ஸ்டெர்லிங், தனக்கு எதிரான விமர்சனங்களைப் பொய்யாக்க ஆவலுடன் இருப்பதாகவும் கூறினார் அர்டெட்டா. நட்சத்திரமாகத் திகழ்ந்த ஸ்டெர்லிங், செல்சியில் விளையாடியபோது சற்று களையிழந்துபோனார்
சென்ற பருவம் ஸ்பர்ஸ் நிர்வாகியாகப் பொறுப்பேற்ற ஏஞ்சி பொஸ்டக்கொக்லு தனது மாறுபட்ட உத்திகளின் வாயிலாக குழுவை விறுவிறுப்பாக விளையாட வைத்துள்ளார். அதேவேளை, ஸ்பர்ஸ் ஒருநேரம்போல் மற்றொரு வேளை விளையாடாமல் இருப்பது ரசிகர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
புதிய பிரிமியர் லீக் பருவத்தின் முதல் மூன்று ஆட்டங்களில் ஸ்பர்ஸ் அதிகம் சோபிக்கவில்லை. ஓர் ஆட்டத்தில் வென்று மற்ற இரண்டில் ஒன்றில் தோல்வியடைந்தது. இன்னொரு ஆட்டம் சமநிலையில் முடிந்தது.
எனினும், தொடர்ந்து நம்பிக்கையுடன் இருக்கிறார் பொஸ்டக்கொக்லு.
“என்னைப் பொறுத்தவரை பெரிய இலக்கை நோக்கிய பயணத்தின் பாதையை ஒரு நிகழ்வு மாற்றாது. ஒரே பகுதியைச் சேர்ந்த மற்றொரு குழுவுக்கு எதிரான ஆட்டத்தில் வெல்வது உதவிக்கரம் நீட்டும். அதேவேளை, ஆகச் சிறந்த குழுக்களில் ஒன்றுக்கு எதிரான ஆட்டம் இது என்பதே கூடுதல் நம்பிக்கை தரும். அதுவே எங்களின் பருவத்துக்குக் கூடுதல் மெருகூட்டக்கூடும்,” என்றார் பொஸ்டக்கொக்லு.
ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெறும் மற்றொரு பிரிமியர் லீக் ஆட்டத்தில் வுல்வர்ஹேம்ப்டன் வாண்டரர்சும் நியூகாசல் யுனைடெட்டும் மோதவுள்ளன.

