தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

காற்பந்து: 17 ஆண்டு ஏக்கம் தீர்த்த ஸ்பர்ஸ்

2 mins read
1b26d8ca-1ea5-4442-89e2-d46723050e56
ஸ்பெயினின் பில்பாவ் நகரில் நடந்த யூரோப்பா லீக் இறுதி ஆட்டத்தில் வாகை சூடிய மகிழ்ச்சியில் டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர் காற்பந்துக் குழுவினர். - படம்: ஏஎஃப்பி
multi-img1 of 2

பில்பாவ்: இங்கிலிஷ் காற்பந்துக் குழுவான டோட்டன்ஹம் ஹாட்ஸ்பரின் 17 ஆண்டு கிண்ணக் கனவு ஒருவழியாக நனவானது.

மான்செஸ்டர் யுனைடெட் குழுவிற்கு எதிராக சிங்கப்பூர் நேரப்படி வியாழக்கிழமை (மே 22) அதிகாலை நடந்த யூரோப்பா லீக் இறுதி ஆட்டத்தில் ஸ்பர்ஸ் 1-0 என்ற கணக்கில் வென்று, கிண்ணத்தைக் கைப்பற்றியது.

நடப்பு இங்கிலிஷ் பிரிமியர் லீக் தொடரில் ஸ்பர்ஸ் குழு 17ஆம் இடத்தில் தத்தளித்து வந்தபோதும் யூரோப்பா லீக் வெற்றி அதற்கு மிகுந்த ஊக்கமளிப்பதாக அமைந்துள்ளது. மாறாக, 16ஆம் இடத்தில் இருக்கும் மான்செஸ்டர் யுனைடெட் யூரோப்பா லீக்கை வென்றேனும் சற்று ஆறுதல் அளிக்கும் என நினைத்த அதன் ரசிகர்களுக்கு இம்முறையும் ஏமாற்றமே மிஞ்சியது.

முற்பாதி ஆட்டத்தின் 42ஆம் நிமிடத்தில் பிரென்னன் ஜான்சன் அடித்த ஒற்றை கோல், ஸ்பர்சின் வெற்றி கோலாக அமைந்தது.

பிற்பாதியில் கோலடித்து ஆட்டத்தைச் சமனுக்குக் கொண்டுவர யுனைடெட்டுக்கு நல்ல வாய்ப்பு கிடைத்தபோதும் ஸ்பர்ஸ் ஆட்டக்காரர் மிக்கி வேன் ட வென் அற்புதமாகச் செயல்பட்டு அதனை முறியடித்தார். ராஸ்முஸ் ஹோய்லண்ட் தலையால் முட்டி வலையை நோக்கி அனுப்பிய பந்தை வேன் ட வென் பாய்ந்து சென்று அதனைத் தடுத்தார்.

கடந்த 2008ஆம் ஆண்டில் லீக் கிண்ணத்தைக் கைப்பற்றிய பிறகு ஸ்பர்ஸ் வென்ற முதல் கிண்ணம் இதுதான். அதுபோல், ஐரோப்பிய அளவிலும் 41 ஆண்டுகளில் அதற்குக் கிடைத்த முதல் வெற்றி இதுதான். முன்னதாக, 1984ஆம் ஆண்டு யூயேஃபா கிண்ணத்தை அது வென்றிருந்தது.

யூரோப்பா லீக்கை வென்றதால் ஸ்பர்ஸ் நிர்வாகியான 59 வயது ஆண்ட்ரே போஸ்டகோக்லுவின் பதவிக்கு இருந்த ஆபத்தும் விலகியதாகச் சொல்லப்படுகிறது.

“இந்த வெற்றி ஸ்பர்ஸ் குழுவிற்கு எந்த அளவிற்கு முக்கியம் என்பதை அறிந்துள்ளேன். இதற்கு முன்னரும் இத்தகைய சூழலை எதிர்கொண்டுள்ளதால் குழுவில் அனைவருமே ஒருவித பதற்றத்துடனேயே இருந்ததை உணர முடிந்தது,” என்றார் போஸ்டகோக்லு.

குறிப்புச் சொற்கள்