தம்புள்ளை: மகளிர் ஆசியக் கிண்ண டி20 கிரிக்கெட் தொடரின் அரையிறுதியில் இலங்கை அணி, பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது.
கடைசி ஓவர்வரை பரபரப்பாகச் சென்ற அரையிறுதியில், இலங்கை அணி ஒரு பந்து எஞ்சியிருந்த நிலையில், மூன்று விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இலங்கையில் நடந்து வரும் ஆசியக் கிண்ணத் தொடரில் இந்திய மகளிரணி ஏற்கெனவே இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றுவிட்டது. அவ்வணி அரையிறுதியில் பங்ளாதேஷைப் பத்து விக்கெட் வித்தியாசத்தில் மிக எளிதாகத் தோற்கடித்தது.
இந்நிலையில், இரண்டாவது அரையிறுதியில் இலங்கை - பாகிஸ்தான் அணிகள் மோதின. முதலில் பந்தடித்த பாகிஸ்தான் 20 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 140 ஓட்டங்களை எடுத்தது.
சொந்த மண் சாதகத்துடன் அடுத்து பந்தடித்த இலங்கை அணிக்குத் தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. விஷ்மி குணரத்ன ஓட்டமேதும் எடுக்காமல் நடையைக் கட்டினார்.
ஆயினும், வழக்கம்போல் அணித்தலைவர் சமரி அத்தப்பத்து எதிரணிப் பந்துவீச்சாளர்களுக்குக் கொடுங்கனவாகத் திகழ்ந்தார். அவர் 48 பந்துகளில் 63 ஓட்டங்களைக் குவித்தார்.
கடைசி ஓவரில் மூன்று ஓட்டங்களே தேவைப்பட்டபோதும் இலங்கை அணி தடுமாறியது. முதல் நான்கு பந்துகளில் ஒரு விக்கெட்டை இழந்து, ஓர் ஓட்டத்தை மட்டுமே எடுத்ததால் ஆட்டம் பரபரப்பாக அமைந்தது. ஆனாலும், பாகிஸ்தான் வீராங்கனை நிடா தர் ஓர் ‘அகலப்பந்தை’ வீச, அடுத்த பந்தில் இன்னும் ஓர் ஓட்டத்தை எடுத்து, வெற்றியை உறுதிப்படுத்தியது இலங்கை அணி.
ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 28) சிங்கப்பூர் நேரப்படி மாலை 5.30 மணிக்குத் தொடங்கவுள்ள இறுதிப்போட்டியில், கிண்ணத்தைக் கைப்பற்றும் நோக்குடன் இந்தியாவும் இலங்கையும் பொருதவுள்ளன.

