தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கோஹ்லியிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள்: பங்ளாதேஷ் வீரர்களுக்கு ஸ்ரீராம் வலியுறுத்து

1 mins read
9f6910dd-cff1-4259-8794-5ed4f035fac7
இந்திய அணி வென்றதும் ஆட்ட நாயகனான விராத் கோஹ்லிக்கு வாழ்த்து கூறும் பங்ளாதேஷ் வீரர்கள். - படம்: ஏஎஃப்பி

புனே: ஒருநாள் கிரிக்கெட் உலகக் கிண்ணப் போட்டியில் இந்தியாவிடம் பங்ளாதேஷ் தோற்றதையடுத்து, பங்ளாதேஷ் வீரர்கள் இந்தியாவின் விராத் கோஹ்லியிடமிருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று அவ்வணியின் ஆட்டநுணுக்க ஆலோசகர் ஸ்ரீதரன் ஸ்ரீராம் வலியுறுத்தியிருக்கிறார்.

இம்மாதம் 19ஆம் தேதி புனேயில் நடந்த அப்போட்டியில் கோஹ்லி சதமடித்தார்.

முன்னதாக, முதலில் பந்தடித்த பங்ளாதேஷ் அணிக்கு லிட்டன் குமார் தாஸ் (66) - தன்ஸித் தமீம் (51) இணைந்து சிறப்பான அடித்தளம் அமைத்துத் தந்தனர். ஆனால், பின்வந்தவர்கள் நிலைத்து ஆடி, பெரிய இலக்கை எட்டத் தவறிவிட்டனர்.

இந்நிலையில், ஓர் இன்னிங்சை எவ்வாறு கட்டமைப்பது, எப்படி முன்னெடுத்துச் செல்வது என்பதை பங்ளாதேஷ் வீரர்கள் கோஹ்லியிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டுமென தமிழகத்தின் ஸ்ரீராம் கூறியுள்ளார்.

“கோஹ்லி 70, 80 ஓட்டங்களை எட்டும் வரையிலும் ஒரு பந்தைக்கூடத் தூக்கி அடிக்கவில்லை. அத்துடன், இடைவெளி பார்த்து பந்தை அடிப்பது, விக்கெட்டுகளுக்கு இடையே வேகமாக ஓடுவது என்பன போன்றவற்றையெல்லாம் கோஹ்லியிடமிருந்து பங்ளாதேஷ் அணியினர் கற்றுக்கொள்ள வேண்டும்,” என்று ஸ்ரீராம் குறிப்பிட்டார்.

இதுவரை நான்கு போட்டிகளில் ஆடி, ஒன்றில் மட்டும் வென்றுள்ள பங்ளாதேஷ், அடுத்ததாக 24ஆம் தேதி செவ்வாய்க்கிழமை தென்னாப்பிரிக்க அணியை எதிர்த்தாடவுள்ளது.

குறிப்புச் சொற்கள்