புதுடெல்லி: தான் தனிப்பட்ட முறையில் இன்னொருவருடன் பேசியதை ஒலிபரப்பி, விதியை மீறிவிட்டதாக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின்மீது இந்திய அணித்தலைவர் ரோகித் சர்மா குற்றம் சாட்டியிருந்த நிலையில், அந்நிறுவனம் அதனை மறுத்துள்ளது.
கோல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் துணைப் பயிற்றுநர் அபிஷேக் நாயருடன் மும்பை இந்தியன்ஸ் அணியின் ரோகித் பேசிக்கொண்டிருந்ததை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ஒளிபரப்பாளர்கள் படம்பிடித்தனர். அப்போது, ஒலியை அணைக்குமாறு அவர்களிடம் ரோகித் கேட்டுக்கொண்டார்.
இந்நிலையில், தன்னுடைய தனிப்பட்ட உரையாடலை ஒலிபரப்பிவிட்டதாக ஞாயிற்றுக்கிழமையன்று (மே 19) ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தை ரோகித் சாடியிருந்தார்.
இந்நிலையில், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அதற்கு மறுப்பறிக்கை வெளியிட்டுள்ளது.
“அக்காணொளி மே 16ஆம் தேதி மும்பை வான்கடே அரங்கில் இடம்பெற்ற பயிற்சியின்போது எடுக்கப்பட்டது. அங்கு செல்வதற்கு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் உரிய அனுமதி பெற்றுள்ளது. அந்த மூத்த வீரர், தன் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தது தற்செயலாகவே காட்டப்பட்டது. அவர்கள் பேசியது எதுவும் பதிவுசெய்யப்படவோ ஒலிபரப்பப்படவோ இல்லை.
“ஆட்டத்திற்கு ஆயத்தமானபோது, தான் பேசுவதைப் பதிவுசெய்ய வேண்டாம் என்று அந்த மூத்த வீரர் கேட்டுக்கொண்டது மட்டுமே ஸ்டார் ஸ்போர்ட்சின் நேரடி ஒளிபரப்பில் இடம்பெற்றது,” என்று அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ரோகித்தின் பேச்சுடன் கூடிய காணொளி கோல்கத்தா அணியின் சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிடப்பட, எதிர்காலத்தில் ரோகித், மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இணைந்து விளையாடுவாரா என்ற ஐயத்தைக் கிளப்புவதாக அமைந்தது, ஆயினும், சர்ச்சை வெடித்ததைத் தொடர்ந்து, பின்னர் அக்காணொளி அகற்றப்பட்டது.