யூரோ 2016 காற்பந்துப் போட்டி களின் காலிறுதிக்கு முந்தைய சுற்றிலிருந்து இங்கிலாந்து வெளியேறியபின் அடுத்த இங்கிலாந்து காற்பந்து நிர்வாகியைத் தேடும் பணியில் அந்நாட்டு காற்பந்து சங்கம் ஈடுபட்டுள்ளது. இந்தப் பிரச்சினையில் இங்கிலாந்து காற்பந்துச் சங்கம் இங்கிலாந்து நாட்டவர் ஒருவரைத் தான் அடுத்த நிர்வாகியாக நியமிக்கப்போவதாக தெரிவிக்காத நிலையில், சண்டர்லேண்ட் குழு வின் நிர்வாகியான சேம் அலர்டைஸ்தான் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது. இவரைப் பற்றிக் கூறும் மான்செஸ்டர் யுனைடெட் நிர்வாகி சர் அலெக்ஸ் ஃபெர்குசன், "சரியான நபர் பற்றிக் கூறுவது மிகவும் கடினம். ஏனெனில், பிரிமியர் லீக்கில் இங்கிலாந்து நிர்வாகிகள் என்றால் மூவர்தான் உள்ளனர். "சேம் அலர்டைசின் அனுபவத்தை வைத்துப் பார்க்கும்போது அவரைவிட தேர்வு பெறத் தகுதியானவர் யாருமில்லை," என்று புகழாரம் சூட்டியுள்ளார். 10 ஆண்டுகளுக்கு முன்னர் இவர் இங்கிலாந்து காற்பந்து குழு நிர்வகிப்பது குறித்து சங்கம் ஆராய்ந்தது. ஆனால், அப்போது இவருக்கு பதிலாக மற்றொரு இங்கிலாந்தவரான ஸ்டீவ் மெக்ளேரன் நிர்வாகியாக நியமிக்கப் பட்டார்.
ஸ்டீவ் மெக்ளேரன் தலைமையில் இங்கிலாந்து அணி யூரோ 2008 காற்பந்துப் போட்டிகளுக்கு தகுதி பெற தவறியது. ஆனால், இதற்கு முன்னரே இங்கிலாந்து அணியின் எதிர்காலம் குறித்துக் கருத்துரைத்த சேம் அலர்டைஸ், "இங்கிலாந்து அணி அதல பாதாளத்துக்குச் சென்று கொண்டிருக்கிறது," என்றார். ஸ்டீவ் மெக்ளேரனை தேர்ந்தெடுத்தபோது சேம் அலர்டைஸ் கூறிய வார்த்தைகள் இன்னமும் பலரது காதுகளில் கணீரென ஒலிக்கின்றன. "பிரச்சினை இப்பொழுது தெரியாது, எதிர்காலத்தில்தான் அது தெரியவரும்," என்று ஆருடம் கூறினார் 'பிக் சேம்' என தனது பெரிய உருவம் காரணமாக பலராலும் அழைக்கப்படும் சேம் அலர்டைஸ்.
இங்கிலாந்து காற்பந்துக் குழுவின் நிர்வாகியாக நியமிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படும் சேம் அலர்டைஸ். படம்: ராய்ட்டர்ஸ்

