வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இந்திய பந்துவீச்சாளர்களின் மோசமான ஆட்டத்தால் ஆட்டம் சமநிலை காண வெற்றி வாய்ப்பை இழந்த இந்திய அணிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய இரண்டாவது டெஸ்ட் போட்டி ஜமைக்காவில் நடைபெற்றது. இதில் முதல் இன்னிங்ஸில் வெஸ்ட் இண்டீஸ் அணி 196 ஓட்டங்கள் எடுத்தது. இந்திய அணி 500 ஓட்டங்கள் எடுத்து 'டிக்ளேர்' செய்தது.
302 ஓட்டங்கள் பின் தங்கிய நிலையில் வெஸ்ட் இண்டீஸ் 2வது இன்னிங்சை ஆட இருந்த நிலையில் மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. 3வது நாளில் மழையால் 46.1 ஓவர்களே வீசப்பட்டது. இதேபோல 4வது நாள் ஆட்டமும் மழையால் பாதிக்கப் பட்டது. ஐந்தாம் மற்றும் கடைசி நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்தாட்டக்காரர்கள் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர். இதனால் இந்திய பந்து வீச்சாளர்கள் என்ன முயற்சி செய்தும் பலன் கிடைக்கவில்லை. பொறுப்பாக ஆடிய பிளாக்வுட் 63 ஓட்டங்கள் எடுத்து அஸ்வின் சுழலில் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்து ஆடிய டவ்ரிச் தன் பங்கிற்கு 74 ஓட்டங்கள் எடுத்து மிஸ்ரா சுழற்பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். வெஸ்ட் இண்டீஸ் அணியின் தலைவர் ஹோல்டர், சேஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர். இதனால் மேற்கிந்திய தீவுகள் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 388 ஓட்டங்கள் எடுத்தபோது ஆட்டத்தை முடித்துக் கொள் வதாக இரு அணி தலைவர்களும் ஒப்புக்கொள்ள ஆட்டம் சமநிலையில் முடிந்தது.
இந்திய அணியின் விக்கெட்கீப்பரும்(வலது) புஜாராவும் கவனமாக மிக அருகில் நின்று களத்தைக் காக்க முயன்றும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஷேன் டவ்ரிச் (இடது) அஷ்வின் வீசிய பந்தை அடித்து விளாச முற்படுகிறார் படம்: ராய்ட்டர்ஸ்.

