விளையாட்டோடு நின்றுவிடாமல் சமூக ஈடுபாடுகளில் அக்கறை கொண்டு சாதிக்கும் விளையாட்டாளர்களைக் கௌரவிக்கும் வகையில் ஒலிம்பிக் வெற்றிச் சின்ன விருதை அறிமுகப்படுத்தியுள்ளது அனைத்துலக ஒலிம்பிக் மன்றம். அந்த வகையில், நேற்றைய ஒலிம்பிக் தொடக்க விழாவின் போது கென்ய ஒலிம்பிக் மன்றத் தலைவரான 76 வயது கிப்சோக் கைனோவிற்கு அந்த விருது வழங்கப்பட்டது. ஐந்து கண்டங்களைச் சேர்ந்தவர்கள் அடங்கிய தன்னிச்சையான நடுவர் குழு இந்த விருதுக்கு கைனோவின் பெயரைப் பரிந்துரைத்தது.
ஒலிம்பிக் போட்டிகளில் இரு தங்கம், இரு வெள்ளிப் பதக்கங்களை வென்றுள்ள கைனோ, 1973ல் விளையாட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு ஆதரவற்ற குழந்தைகள் இல்லம் ஒன்றைத் தொடங்கினார். மூன்றாண்டுகளுக்குப் பின், வளர்ந்து வரும் இளம் கென்ய விளையாட்டாளர்களுக்காக உயர் செயல்திறன் பயிற்சி மையம் ஒன்றையும் அவர் நிறுவினார். படங்கள்: ஏஎஃப்பி, ராய்ட்டர்ஸ்

