தென்கொரியா- வடகொரியா இடையே அரசியல்ரீதியான பிரச்சினை உச்சகட்டத்தில் இருந்துவரும் நிலையில் அந்நாடுகளைச் சேர்ந்த ஒலிம்பிக் விளையாட்டாளர்கள் இருவரின் செய்கை ஏகோபித்த வரவேற்பைப் பெற்றுள்ளது. தென்கொரிய சீருடற்பயிற்சி வீராங்கனையான 17 வயது லீ இயூன் ஜு கடந்த 5ஆம் தேதி தமது பயிற்சிக்குப் பிறகு அங்கிருந்த வடகொரிய வீராங்கனை ஹோங் உன் ஜோங், 27, உடன் தமது கைபேசியில் 'வீஃபி' எடுத்துக்கொண்டார்.
பிறகு அவர் அப்படத்தை டுவிட்டரில் பதிவேற்றம் செய்தார். அனைத்துலக ஒலிம்பிக் மன்றத் தலைவர் தாமஸ் பேக் உட்பட பல நூறாயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்தப் படத்தை 'லைக்' செய்துள்ளனர். எதிரி நாட்டவராக இருந்தபோதும் அவர்களது ஒற்றுமை, ஒலிம்பிக் உணர்விற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு என்று பலரும் பாராட்டியுள்ளனர்.

