ஒலிம்பிக் வரலாற்றில் முதல் முறையாக தொடர்ந்து இரண்டாவது தடவையாக டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார் எண்டி மரே. நேற்று முன் தினம் ரியோவில் நடைபெற்ற டென்னிஸ் ஒற்றையர் பிரிவுப் போட்டியில் அர்ஜென்டினாவின் ஜுவான் மார்டின் டெல் போட்ரோவை 7-5, 4-6, 6-2, 7-5 என்ற கணக்குகளில் தோற்கடித்தார். 2012ஆம் ஆண்டிலும் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் மரே தங்கம் வென்றார். இவ்வாண்டு போட்டிகளில் ஜோகோவிச், நடாலை வெளியேற்றிய டெல் போட்ராவுக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது. விறுவிறுப்பான இறுதிப் போட்டி நான்கு மணி நேரத்துக்கு நீடித்தது. லண்டனில் நடைபெற்ற கடந்த ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற டெல் பொட்ரோ, ரியோவில் நேற்று முன்தினம் மரேயை மோதிய இறுதி ஆட்டத்தில் தோல்விகண்டதை அடுத்து கண்ணீர் சிந்தினார். கடந்த 3 ஆண்டுகளில் டெல் போட்ரோவின் கைகளில் 3 அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப் பட்டதைக் குறிப்பிட்ட மரே, அவரது முயற்சியைப் பெரிதும் பாராட்டினார்.
வெற்றிக் களிப்பில் எண்டி மரே. படம்: ஏஎஃப்பி

