ஒலிம்பிக்கில் மகளிருக்கான ஒற்றையர் பூப்பந்துப் போட்டியில் இந்தியாவுக்காக வெள்ளிப் பதக்கம் வென்று தந்த பி.வி. சிந்துவுக்குப் பாராட்டுகளுடன் பரிசுகளும் குவிகின்றன. ஹைதராபாத் நகரைச் சேர்ந்த சிந்துவுக்கு அந்நகரத்தின் பூப்பந்துச் சங்கத் தலைவர் வி. சாமுண்டேஸ்வர்நாத் பிஎம்டபிள்யூ கார் ஒன்றைப் பரிசளிக்க இருக்கிறார். 2012ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் சாய்னா நேவால் இந்தியாவுக்காக வெண்கலம் வென்றபோது அவருக்கும் அதே பரிசை அவர் கொடுத்திருந்தார். இந்நிலையில், சிந்துவுக்கு ஒரு கோடி ரூபாய் பரிசுத் தொகையை தெலுங்கானா அரசாங்கம் அறிவித்துள்ளது. அதுமட்டுமல்லாது, இந்தியாவின் வெள்ளி நாயகிக்கு நிலம் ஒன் றையும் வழங்க அது முடிவெடுத்துள்ள தாகத் தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியப் பூப்பந்துச் சங்கமும் சிந்துவுக்கு 50 லட்ச ரூபாய் பரிசுத் தொகையை அறிவித் துள்ளது. சிந்துவின் பயிற்றுவிப்பாளர் கோபிசந்துக்கும் அது 10 லட்ச ரூபாய் வழங்கவிருக்கிறது. மத்தியப் பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சாவ்ஹானும் சிந்துவுக்கு 50 லட்ச ரூபாய் பரிசுத் தொகையை அறிவித்துள்ளதாக அம்மாநிலத்தின் பொதுப்பணித் துறையைச் சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் தெரி வித்துள்ளார். விஜயவாடாவைச் சேர்ந்த நகை நிறுவனம் ஒன்று சிந்துவை அதன் தூதராக ஒப்பந்தம் செய்ய விருப்பம் தெரிவித்துள்ளது. மஹிந்திரா அண்ட் மஹிந்திரா வாகன நிறுவனமும் சிந்துவுக்கு கார் ஒன்றைப் பரிசளித்து கௌரவிக்க முடிவெடுத்துள்ளது. இதற்கிடையே, ஒலிம்பிக் பூப்பந்துப் போட்டியின் இறுதி ஆட்டத்துக்குத் தகுதி பெற்று வெள்ளி வென்ற முதல் இந்திய வீராங்கனையான சிந்து தமது சாதனை குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார்.
"வர்ணிக்க முடியாத மகிழ்ச்சியில் நான் மிதந்து கொண்டிருக்கிறேன். ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற பெருமைக்குச் சொந்தக்காரியாகிவிட்டேன்," என்று பதக்க விழாவுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் மகிழ்ச்சி பொங்க தெரிவித்தார் சிந்து. வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளதை அடுத்து, இனி தமது அன்றாட வாழ்க்கை முன்பு போல் இருக்காது என்பது தமக்குத் தெரியும் என்றார் சிந்து. நட்சத்திர அந்துஸ்துடன் இனி வலம் வரவேண்டி இருக்கும் என்பதை உணர்வதாகவும் அவர் கூறினார். இறுதி ஆட்டத்தில் ஸ்பெயினின் கரோலினா மரினை சிந்து எதிர்கொண்டார். முதல் செட்டை 21-19 எனும் புள்ளிக் கணக்கில் சிந்து கைப்பற்றினார். எப்படியும் தங்கத்தை வென்றுவிடவேண்டும் என்ற முனைப்புடன் இருந்தார் சிந்து.
ஆனால் கடுமையான போட்டிக்குப் பிறகு அடுத்த இரண்டு செட்டுகளை 21-12, 21-15 எனும் புள்ளிக் கணக்கில் ஸ்பெயின் வீராங்கனை வென்றார். இறுதி வரை விட்டுக்கொடுக்காமல் விளையாடிய சிந்து பூப்பந்து உலகில் தாமும் ஒரு நட்சத்திரம் என்பதை நிரூபித்துள்ளார். இறுதி ஆட்டத்தில் தோல்வி அடைந்தபோதிலும் தமது அபாரத் திறனை வெளிப்படுத்தி வெள்ளி வென்ற சிந்து தலைநிமிர்ந்து இந்தியா திரும்புகிறார். தங்கள் 21 வயது வெள்ளி மகளை வரவேற்க இந்திய ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.
கடுமையான உழைப்புக்குப் பரிசாகக் கிடைத்த வெள்ளிப் பதக்கத்துக்கு முத்தமிட்டு மகிழும் சிந்து. படம்: ஏஎஃப்பி

