மான்செஸ்டர்: மான்செஸ்டர் யுனைடெட் குழு சவுத்ஹேம்டனை 2=0 எனும் கோல் கணக்கில் தோற்கடித்து இங்கிலிஷ் பிரிமியர் லீக்கில் அதன் இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்துள்ளது. சவுத்ஹேம்டனுக்கு எதிரான ஆட்டத்தில் யுனைடெட்டின் புதிய வரவுகளான சிலாட்டான் இப்ராஹி மோவிச்சும் பால் பொக்பாவும் சிறப்பாக விளையாடினர் என்பது குறிப்பிடத்தக்கது. யுனைடெட்டுடன் இணைந் ததை அடுத்து, அதன் சொந்த அரங்கமான ஓல்ட் டிராஃப் பர்ட்டில் முதல்முறையாகக் களமிறங்கிய இப்ராஹிமோவிச் ஆட்டத்தின் 36வது நிமிடத்தில் கோல் போட்டது அக்குழுவின் ரசிகர்களைக் கொண்டாட்டத்தில் மூழ்க வைத்தது.
யுனைடெட்டின் அணித் தலைவர் வெயின் ரூனி அனுப்பிய பந்தை இப்ராஹிமோவிச் தலையால் முட்டி வலைக்குள் சேர்த்தார். இடைவேளையின்போது யுனை டெட் 1-0 எனும் கோல் கணக்கில் முன்னிலை வகித்தது. பிற்பாதி ஆட்டத்தில் ஆதிக்கத்தைத் தொடர்ந்த யுனைடெட் இரண்டாவது கோலைப் போட்டு வெற்றியை உறுதி செய்தது. ஆட்டத்தைச் சமன் செய்ய சவுத்ஹேம்டன் கொண்டிருந்த கனவு கலைந்தது. ஆட்டத்தின் 52வது நிமிடத் தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பைப் பயன்படுத்தி இப்ராஹி மோவிச் மீண்டும் இரண்டாவது கோலைப் போட்டார். யுனைடெட்டுக்காக இதுவரை இரண்டு ஆட்டங்களில் விளையாடியுள்ள இப்ராஹிமோவிச் மூன்று கோல்களைப் போட்டுள்ளார்.
யுனைடெட்டின் மத்திய திடல் நட்சத்திரம் பொக்பா தமது குழுவின் முதுகெலம்பாக இருந்து வெற்றிக்கு வித்திட்டார். "நாங்கள் சிறப்பாக விளையாடினோம். எங்களுக்குக் கிடைத்த வெற்றி நியாயமானது. சுலபமாக வென்றோம். மேலும் பல கோல்களைப் போட்டிருக்கலாம். பொக்பா அருமையாக விளையாடினார். இந்த ஆட்டத்தில் சுதந்திரமாக செயல்பட அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. தமது முழுத் திறனைக் காட்ட அவருக்கு அந்தச் சுதந்திரம் தேவை. அவரது செயல்பாடு எனக்கு மகிழ்ச்சியைத் தந்துள்ளது," என்று யுனைடெட்டின் நிர்வாகி ஜோசே மொரின்யோ பெருமிதத்துடன் தெரிவித்தார்.
வலை நோக்கிப் பந்தை அனுப்பும் மான்செஸ்டர் யுனைடெட்டின் சிலாட்டான் இப்ராஹிமோவிச் (நடுவில்). படம்: ராய்ட்டர்ஸ்

