பிரிட்டனைச் சேர்ந்த திடல்தட வீரர் மோ ஃபாரா ஒலிம்பிக்கில் தனது நான்காவது தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார். 33 வயதான அவர், நேற்று நடந்த 5,000 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றி இந்தப் பெருமையை அடைந்து உள்ளார்.
இந்தப் பந்தய தூரத்தை 13 நிமிடம் 3.30 வினாடிகளில் அவர் கடந்தார். ஏற்கெனவே நடந்த 10,000 மீ. ஓட்டப் பந்தயத்தில் 27 நிமிடங்கள் 5.17 வினாடிகளில் கடந்து தங்கம் வென்றார். இதன் மூலம், 5,-000 மீ, 10,000 மீ ஆகிய இரண்-டிலும் தங்கத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ள இரண்டாவது வீரர் என்ற பெருமையை அவர் அடைந்துள்ளார். ஃபின்லாந்து வீரர் லாசி விரேன், 1972, 1976 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் இந்த இரண்டு பந்தயங்களையும் முடித்து தங்கப் பதக்கங்களை வென்று உள்ளார்.
தனது வெற்றி பற்றி பிபிசிக்கு அளித்த பேட்டியொன்றில் பேசிய சாதனை நாயகன் மோ ஃபாரா, "10,000 மீட்டர் பந்தயத்திற்குப் பிறகு எனது கால்கள் சிறிது சோர்வடைந்துவிட்டன. எப்படி அதிலிருந்து மீண்டு வந்தேன் என்று தெரியவில்லை. "இந்த வெற்றி நீண்ட தூரப் பயணம். ஆனால், இலக்கோடு கடின உழைப்பும் இருந்தால், கனவு நனவாகும்," என்றார்.
திடல்தட வீரர் மோ ஃபாரா நெடுந்தொலைவு ஓட்டப் பந்தயங்களில் தொடர்ந்து இரண்டு தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார். படம்: ஏஎஃப்பி

