சாம்பியன்ஸ் லீக்கில் மேன்சிட்டி

சாம்பியன்ஸ் லீக்கில் மேன்சிட்டி

2 mins read

மான்செஸ்டர்: தொடர்ந்து ஆறாவது பருவமாக ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் காற்பந்துத் தொடரில் விளையாட இங்கிலாந்தின் மான்செஸ்டர் சிட்டி குழு தகுதி பெற்றுள்ளது. இங்கிலிஷ் பிரிமியர் லீக்கில் கடந்த முறை நான்காமிடத்தில் முடித்ததால் சாம்பியன்ஸ் லீக்கிற்குத் தகுதி பெற சிட்டி குழு 'பிளே ஆஃப்' சுற்றில் விளையாட வேண்டியிருந்தது. இதன் படி ருமேனியாவின் ஸ்டெவா பூக்க ரெஸ்ட் குழுவை அக்குழு எதிர்த்து ஆடியது. இவ்விரு குழுக்களுக்கும் இடை யிலான முதல் ஆட்டத்தில் சிட்டி 5=0 என பூக்கரெஸ்ட் குழுவை வீழ்த்தி, கிட்டத்தட்ட பிரதான சுற்று வாய்ப்பை உறுதி செய்திருந்தது.

இந்நிலையில், 'பிளே ஆஃப்' சுற்றின் இரண்டாம் ஆட்டம் நேற்று அதிகாலை மான்செஸ்டரில் உள்ள எட்டிஹாட் விளையாட்டரங்கில் நடை பெற்றது. முதல் ஆட்டத்தில் 'ஹாட்ரிக்' கோல் அடித்த செர்ஜியோ அகுவேரோ உள்ளிட்ட முக்கிய வீரர்களை சிட்டி நிர்வாகி கார்டியோலா நேற்று களம் இறக்கவில்லை. போட்டியில் வெற்றிபெற பூக்கரெஸ்ட் குழு போராடும் என எதிர்பார்க்கப் பட்டது. மாறாக, இன்னும் அதிகமாக கோல்களை வாங்கி மோசமாகத் தோல்வியடைந்து மேலும் அவமானப் பட்டுவிடக்கூடாது என்ற நோக்கில் தற்காப்பிலேயே அக்குழு அதிகம் கவனம் செலுத்தியது.

ஆயினும், 56வது நிமிடத்தில் அதன் தற்காப்பு அரணை உடைத்து பந்தை வலைக்குள் உதைத்தார் சிட்டி ஆட்டக்காரர் ஃபேபியன் டெல்ஃப். இந்த ஒரே கோலுடன் ஆட்டம் 1=0 என்ற கணக்கில் சிட்டிக்குச் சாதகமாக முடிந்தது. இதையடுத்து, ஒட்டுமொத்த கோல் கணக்கில் 6=0 என முன்னிலை பெற்று பிரதான சுற்றில் சிட்டி அடியெடுத்து வைத்தது.