இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்தாட்டம் ஒன்றில் ஹல் சிட்டி குழுவை நேற்று அதிகாலை சந்தித்த மான்செஸ்டர் யுனைடெட் அந்தக் குழுவை வெற்றி கொள்வதில் மிகுந்த சிரமப்பட்டது. உலகில் மிக அதிக விலை கொடுத்து வாங்கப்பட்ட பால் பொக்பா, முன்னணி தாக்குதல் ஆட்டக்காரர்களான ஸ்லட்டான் இப்ராகிமோவிச், ஆண்டனி மாரிசியல், ரூனி என நட்சத்திர வீரர் பட்டாளமே இருந்தபோதும் ஹல் சிட்டியின் தற்காப்பு அரணை தகர்க்க மேன்யூவால் முடிய வில்லை. அதிலும் கர்டிஸ் டேவிஸ் என்ற தற்காப்பு ஆட்டக்காரர் ஒருவராக பல சந்தர்ப்பங்களில் ஹல் சிட்டியை காப்பாற்றினார். முன்னணி தாக்குதல் ஆட்டக் காரர்களுக்கு ஈடுகொடுத்து விளையாடிய ஹல், சில சமயங் களில் எதிர்த்தாக்குதல்கள் நடத்தி மேன்யூவை திக்குமுக்காட வைத்தது.
ஆட்டத்தின் போக்கை மாற்றினால்தான் வெற்றி பெற முடியும் என்று முடிவு செய்த யுனைடெட்டின் புதிய நிர்வாகியான ஜோசெ மொரின்யோ, இரண்டாம் பாதி ஆட்டத்தில் மிக்கிடாரியானையும் பின்னர் கடைசி இருபது நிமிடங்களில் மார்க்கஸ் ரேஷ் ஃபர்ட்டையும் களமிறக்கினார். அதிலிருந்து யுனைடெட்டின் தாக்குதல்கள் இரட்டிப்பாகின. இறுதியில், கூடுதல் நேரத்தில் ரூனி, ஹல் தற்காப்பு ஆட்டக்காரர்களைத் தாண்டிச் சென்று பந்தை கோல் எல்லைக்குள் செலுத்த எங்கிருந்தோ ஓடி வந்த ரேஷ்ஃபர்ட் கண்ணிமைக்கும் பொழுதில் பந்தை கோல் வலைக்குள் புகுத்தி யுனைடெட் அதுவரை கற்பனை செய்து பார்க்க முடியாத வெற்றியைப் பெற்றுத் தந்தார். சென்ற காற்பந்துப் பருவத்தில் 18 ஆட்டங்களில் எட்டு கோல்கள் போட்ட 18 வயது மட்டுமே நிரம்பிய ரேஷ்ஃபர்ட் இந்தப் பருவத் திலும் மேன்யூவிற்கு பெறற்கரிய வெற்றியைப் பெற்றுத் தந்தார். இவருடைய ஆட்டம் பற்றிக் கூறிய முன்னாள் இங்கிலாந்து தாக்குதல் ஆட்டக்காரர் ஆலன் ஷியரர், "யுனைடெட்டில் அவர் ஆட்டத்தின் தொடக்கத்தில்இருந்தே விளையாடும் காலம் வெகு தூரத்தில் இல்லை," என்று கருத்துரைத்தார்.
எதிரணி வீரர் ஆண்ட்ரூ ராபர்ட்சனிடம் (வலது) இருந்து பந்தைத் தட்டிப்பறிக்கும் இங்கிலாந்தின் மாற்று ஆட்டக்காரராக களமிறங்கிய ரேஷ்ஃபர்ட்-. படம்: ஏஎஃப்பி

