டம்புல்லா: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 24 பந்துகள் எஞ்சியிருந்தபோது இரண்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கை தோல்வி அடைந்தும் தமது இறுதி ஒருநாள் ஆட்டத்தில் களமிறங்கிய திலகரத்னே தில்ஷனுக்கு இலங்கை ரசிகர்கள் அமோகப் பிரியாவிடை அளித்தனர். இந்த ஆட்டத்தில் தில்ஷன் 42 ஓட்டங்கள் எடுத்திருந்தார். 330 ஒருநாள் ஆட்டங்களில் களமிறங்கிய தில்ஷன் மொத்தம் 10,290 ஓட்டங்கள் எடுத்துள்ளார். அவற்றில் 22 சதங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டு டி2-0 ஆட்டங்களில் பங்கெடுத்த பிறகு அனைத்துலக கிரிக்கெட் ஆட்டங்களிலிருந்து தில்ஷன் ஓய்வு பெறுகிறார். இலங்கையின் டம்புல்லா நகரில் நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியை வென்ற ஆஸ்திரேலியா 2-1 என்று தொடரில் முன்னிலை வகிக்கிறது. நான்காவது ஒருநாள் போட்டி நாளை நடைபெறுகிறது.

