பிரசல்ஸ்: பெல்ஜியம் எஃப்1 பந்தயத்தைப் பின் வரிசையில் இருந்து ஆரம்பித்த லூவிஸ் ஹெமில்டன் மின்னல் வேகத்தில் தமது காரைச் செலுத்தி மூன்றாவது இடத்தைப் பிடித்தார். மூன்றாவது இடத்தில் பந்தயத்தை முடிப்பது குறித்து சற்றும் எதிர்பார்க்கவில்லை என்று தெரிவித்த மெர்சடிஸ் அணியைச் சேர்ந்த ஹெமில்டன், பந்தயத்துக்குப் பிறகு மகிழ்ச்சியே உருவாக இருந்தார்.
ஹெமில்டனின் சக வீரரான நிக்கோ ரோஸ்பர்க் பந்தயத்தைக் கைப்பற்றினார். இருப்பினும், ஒட்டுமொத்த புள்ளிக் கணக்கு அடிப்படையில் 232 புள்ளிகளுடன் ஹெமில்டன் முன்னிலை வகிக்கிறார். 223 புள்ளிகளுடன் ரோஸ்பர்க் இரண்டாம் நிலையில் உள்ளார். பந்தயத்தின் ஒன்பதாவது சுற்றில் ரெனால்ட் அணியின் கெவின் மெக்னுசன் ஓட்டிய கார் மோசமான விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக உயிருக்கு எவ்வித ஆபத்தும் இல்லாமல் கணுக்கால் காயத்துடன் தப்பினார் மெக்னுசன். பெல்ஜியம் எஃப்1 பந்தயத்தில் ரெட் புல் அணியின் டேனியல் ரிக்கியாடோ இரண்டாவது இடத்திலும் ஃபோர்ஸ் இந்தியாவின் நிக்கோ ஹல்க்கன்பர்க் நான்காவது இடத்திலும் வந்தனர்.

