மெக்கே: வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் ஆட்டத்தில் இந்திய அணி கடைசி பந்தில் வெற்றியை நழுவவிட்டது போல், இந்திய 'ஏ' அணியும் கடைசி பந்தில் 2 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில் வெற்றியைப் பறிகொடுத்தது. ஆஸ்திரேலியாவில் 4 அணி கள் விளையாடும் ஒருநாள் போட்டித் தொடர் நடைபெற்று வருகிறது. இத்தொடரின் இறுதிப் போட்டிக்கு ஏற்கெனவே தகுதி பெற்றுவிட்ட இந்திய 'ஏ' அணி, கடைசி லீக் ஆட்டத்தில் ஆஸ்தி ரேலிய 'ஏ' அணியிடம் 1 ஓட்ட வித்தியாசத்தில் தோற்றது. ரே மிட்செல் ஓவல் மைதானத் தில் நடந்த இப்போட்டியில் பூவா தலையா வென்ற இந்தியா 'ஏ' முதலில் பந்து வீசியது. ஆஸ்திரேலியா 'ஏ' அணி 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 322 ஓட்டங்கள் குவித்தது. அவ்வணியின் கர்ட்டிஸ் பேட்டர் சன் 115, நிக் மேடின்சன் 118 ஓட்டங்களை விளாசினர்.
323 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அடுத்துக் களமிறங்கிய இந்தியா 'ஏ' அணி 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 321 ஓட்டம் எடுத்து 1 ஓட்ட வித்தியாசத்தில் தோற்றது. மன்தீப் சிங் 56, அணித் தலைவர் மணீஷ் பாண்டே 110, சஞ்ஜு சாம்சன் 87 ஓட்டம் விளாசினர்.

