மெண்டோஸா (அர்ஜெண்டினா): கோப்பா அமெரிக்கா காற்பந்துத் தொடரின் இறுதிப் போட்டியில் தோற்று கிண்ணத்தை நழுவவிட்ட தால் மனமுடைந்து அனைத்துலகப் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்து பின் அந்த முடிவை திரும்பப் பெற்ற மெஸ்ஸி, வெற்றியுடன் தமது மறுபிரவேசத்தைத் தொடங்கி இருக்கிறார். 2018ஆம் ஆண்டு ரஷ்யாவில் நடக்கவுள்ள உலகக் கிண்ணத்திற்கான தகுதிச் சுற்று ஆட்டமொன்றில் மெஸ்ஸியின் மந்திரக் கால்களில் இருந்து வந்த ஒரே கோலால் பரம எதிரியான உருகுவேயை 1=0 என வீழ்த்தியது அர்ஜெண்டினா. இந்த வெற்றியின்மூலம் தென் அமெரிக்க நாடுகளுக்கான தகுதிச் சுற்றுப் பட்டியலில் அந்த அணி 14 புள்ளிகளுடன் முதல்நிலைக்குத் தாவியது. ஆட்டத்தின் 43வது நிமிடத்தில் விழுந்த அந்த கோலால் அர் ஜெண்டினாவிற்காக மெஸ்ஸி அடித்த கோல் களின் எண்ணிக்கை 56ஆக உயர்ந்தது.
முற்பாதி ஆட்டம் முடியவிருந்தபோது இரண்டாவது முறையாக மஞ்சள் அட்டை பெற்றதால் திடலைவிட்டு வெளியேற்றப் பட்டார் அர்ஜெண்டினாவின் இளம் தாக் குதல் ஆட்டக்காரர் பௌலோ டைபாலா. இதனால் அர்ஜெண்டினா பிற்பாதி ஆட்டம் முழுவதும் பத்து வீரர்களுடன் ஆடும் நிலைக்குத் தள்ளப்பட்டது. மற்றோர் ஆட்டத்தில் பிரேசில் 3=0 என்ற கோல் கணக்கில் எக்வடோரைத் தோற்க டித்தது. நட்சத்திர வீரர் நெய்மார் ஒரு கோலடித்த போதும் ஆட்ட நாயகனாகத் திகழ்ந்ததென்னவோ அறிமுக வீரரான 19 வயது கேப்ரியல் ஜீசஸ்தான். இதற்கிடையே, ஐரோப்பாவில் நடந்த நட்பு முறை ஆட்டங்களில் பிரான்ஸ், ஸ்பெயின், போர்ச்சுகல் அணிகள் வெற்றியை ருசித்தன. இத்தாலி, நெதர்லாந்து ஆகியவை மண்ணைக் கவ்வின. ஆன்டனி மார்சியால், பால் போக்பா, ஒலிவியர் ஜிரூட் என இங்கிலிஷ் பிரிமியர் லீக்கில் விளையாடும் மூன்று பிரெஞ்சு ஆட்டக்காரர்கள் ஆளுக்கொரு கோலை அடிக்க, 3=1 என்ற கோல் வித்தியாசத்தில் இத்தாலியைப் பந்தாடியது பிரான்ஸ்.
பிரசல்சில் நடந்த ஆட்டத்தில் டாவிட் சில்வா புகுத்திய இரு கோல்களால் உலகின் எட்டாம் நிலை அணியான ஸ்பெயின் 2=0 என்ற கோல் கணக்கில் இரண்டாம் நிலை அணியான பெல் ஜியத்தைத் தோற்கடித்தது. நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ இல்லாத நிலை யிலும் இன்னோர் அனுபவ ஆட்டக்காரர் நானி இரு கோல்களை அடிக்க, 5=0 என்ற கணக்கில் ஜிப்ரால்டரைப் புரட்டி எடுத்தது போர்ச்சுகல். 2016 யூரோ கிண்ண இறுதிச் சுற்றுப் போட்டி களுக்குத் தகுதிபெற முடியாமல் தலைக் குனிவைச் சந்தித்த நெதர்லாந்து, அடுத்த உலகக் கிண்ணத் தொடரிலாவது சாதிக்கும் ஆசையுடன் இருக்கிறது. ஆயினும் அதுவும் நிராசையாகிப் போகுமோ என்ற அச்சப்படத்தக்க வகையில் அதன் செயல்பாடு இருந்து வருகிறது. சொந்த மண்ணில் நடந்த கிரீசுக்கு எதிரான நட்புமுறை ஆட்டத்தில் 14வது நிமிடத்தில் கோல் அடித்து முன்னிலை பெற்றபோதும் அதன்பின் இரு கோல்களை விட்டுக்கொடுத்து அந்த அணி வெற்றியை இழந்தது.

