பார்சிலோனா: சொந்த மண்ணில் அதன் உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிக்கான தகுதிச் சுற்றை ஸ்பெயின் மாபெரும் வெற்றியுடன் தொடங்கியுள்ளது. நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் 8-0 எனும் கோல் கணக்கில் லீச்சன்ஸ்டைன் குழுவை ஸ்பெயின் புரட்டி எடுத்தது. பிற்பாதி ஆட்டத்தில் ஸ்பெயின் கோல் மழை பொழிந்து லீச்சன்ஸ்டைன் குழுவை வேரோடு சாய்த்தது. ஆட்டத்தின் 10வது நிமிடத்தில் டியேகோ கோஸ்டா ஸ்பெயினின் முதல் கோலைப் போட்டார். கடந்த இரண்டு ஆண்டுகளில் இதுவே ஸ்பெயினுக்காக அவர் போட்ட முதல் கோல்.
இடைவேளையின்போது ஸ்பெயின் 1-0 எனும் கோல் கணக்கில் முன்னிலை வகித்தது. பிற்பாதியில் ஸ்பெயினை ஒரு கை பார்க்கலாம் என்று களமிறங்கிய லீச்சன்ஸ்டைனுக்கு மறக்கமுடியாத, கசப்பான அதிர்ச்சி காத்துக்கொண்டிருந்தது. பிற்பாதி ஆட்டம் தொடங்கி பத்து நிமிடங்களில் ஸ்பெயினின் இரண்டாவது கோல் புகுந்தது. செர்கி ரொபேர்ட்டோ அனுப்பிய பந்து வலையைத் தீண்டியது. அதனைத் தொடர்ந்து டாவிட் சில்வா இரண்டு கோல்களும் டியேகோ கோஸ்டோ மேலும் ஒரு கோலும் அல்வாரோ மோராட்டா இரண்டு கோல்களும் விடோலோ ஒரு கோலும் போட்டனர்.
மற்றோர் ஆட்டத்தில் அண்மையில் நடந்து முடிந்த ஐரோப்பியக் காற்பந்துப் போட்டியில் சக்கைப் போடு போட்ட வேல்ஸ் 4-0 எனும் கோல் கணக்கில் மோல்டோவாவை எளிதில் வென்றது. இந்த ஆட்டம் வேல்ஸ் தலைநகரம் கார்டிவ் நகரில் நடைபெற்றது. வேல்ஸ் குழுவின் நட்சத்திர வீரர் கேரத் பேல் இரண்டு கோல்களைப் போட்டார். ஆட்டத்தின் 50வது நிமிடத்திலும் ஆட்டம் முடிய சில வினாடிகள் இருந்தபோதும் அவர் கோல்களை போட்டார். அதுமட்டுமல்லாது, ஆட்டத்தின் 38வது நிமிடத்தில் அவர் அனுப்பிய பந்தை சேம் வோக்ஸ் கோலாக்கினார். வேல்ஸ் அணியின் இன்னொரு கோலை ஆட்டத்தின் 44வது நிமிடத்தில் எலன் போட்டார்.
மற்றோர் ஆட்டத்தில் இத்தாலி 3-1 எனும் கோல் கணக்கில் இஸ்ரேலை வீழ்த்தியது. ஆட்டத்தின் 14வது நிமிடத்தில் கிராசியானோ பெல்லே இத்தாலியின் முதல் கோலை போட்டார். ஆட்டத்தின் 31வது நிமிடத்தில் இத்தாலிக்குக் கிடைத்த பெனால்டி வாய்ப்பை கோலாக்கினார் அண்டோனியோ கன்டிரேவா.
வலை நோக்கிப் பந்தை அனுப்பும் ஸ்பெயினின் டாவிட் சில்வா (இடது). படம்: ஏஎஃப்பி

