மான்செஸ்டர்: இங்கிலிஷ் பிரிமியர் லீக்கில் ஒன்றுக்கு ஒன்று எலியும் பூனையுமாக விளங்கும் மான்செஸ்டர் யுனைடெட், மான்செஸ்டர் சிட்டி குழுக்கள் இன்றிரவு மோதும் நிலையில், மேன்யூவின் தாக்குதலை, குறிப்பாக எந்நேரமும் தலையால் முட்டி பந்தை கோல் வலைக்குள் தட்டி விடக்கூடிய அதன் தாக்குதல் வீரர்களின் சாகசத்தை சிட்டி குழு வால் சமாளிக்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்தப் பருவத்தில் பிரிமியர் லீக் பட்டத்துக்காக இவ்விரு குழுக்களும் மோதிக்கொள்வது நிச்சயம் என்ற நிலையில், இந்த ஆட்டத்தின் வழி இரு குழுக்களுமே தங்களது தனித்தன்மையை வெளிப்படுத்தும் என்று முன்னாள் இங்கிலாந்துக் குழுவின் தாக்குதல் ஆட்டக்காரர் ஆலன் ஷியரர் கூறுகிறார்.
மேலும், இவ்விரு குழுக்களின் நிர்வாகிகளான ஜோசெ மொரின்யோவும் பெப் கார்டியோலா வும் பிரிமியர் லீக்கில் தத்தம் குழுக்கள் விளையாடிய முதல் மூன்று ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளதால் இவர்களுக்கு இடையேயுள்ள போட்டி உணர்வால் ஆட்டத்தில் தீப்பொறி பறப்பது நிச்சயம் என்று திர்பார்க்கப்படு கிறது. சிட்டி குழுவில் நொலிட்டோ, ரகீம் ஸ்டெர்லிங், கெவின் டி பிரய்ன போன்ற திறமையான வீரர்கள் உள்ளனர் என்றபோதிலும் செர்ஜியோ அக்குவேரோவுக்கு மூன்று ஆட்டங்களில் விளையாடத் தடை விதிக்கப்பட்டிருப்பது அந்தக் குழுவுக்கு பெரும் பின்னடைவு.
அத்துடன், புதிய கோல்காப்பாள ரான குளோடியோ பிராவோ தமது குழுவுடன் இன்னும் ஒன்றிணைந்து பயிற்சியில் ஈடுபடாததால் அவருக்கு விளையாட வாய்ப்பு வழங்கப்படுமா இல்லை கார்டியோலாவின் நம்பிக்கையை இழந்து நிற்கும் ஜோ ஹார்ட்டுக்கே மீண்டும் வாய்ப்புக் கொடுக்கப் படுமா என்ற சந்தேகம் நிலவுகிறது.
எனவே, மிகப் பெரிய போட்டி இன்று நடைபெறும் நிலையில் அதற்கு சிட்டி குழு தயாராக உள்ளதா என்ற கேள்வி எழுகிறது. மேன்யூவில் ஸ்லாட்டான் இப்ராகிமோவிச், மருவான் ஃபெலய்னி போன்ற மிக உயரமான வீரர்கள் எளிதில் எம்பி பந்தை கோல் வலைக் குள் செலுத்தும் திறன் படைத்திருப்பது ஒரு பக்கம், மைதானத்தின் இருபுறங் களிலிருந்தும் பந்தை கோல் எல்லைக்குள் அனுப்பும் திறன் வாய்ந்த வீரர்கள் மறு பக்கம் என சிட்டி குழுவுக்கு இருதலைக் கொள்ளி எறும்பாக இருக்கும் வீரர்கள் யுனைடெட்டில் நிறையவே உள்ளனர் என்கிறார் ஆலன் ஷியரர். இதனாலேயே கடந்த காற்பந்துப் பருவத்தைப் போலல்லாது இப்பருவத்தில் யுனைடெட்டின் வீரர்கள் மிக அதிக அளவில் பந்தை கோல் எல்லைக்குள் அனுப்பி வருவதாகவும் இவர் கூறுகிறார்.
அத்துடன், பால் போக்பா, எரிக் பெய்லி டேய்லி பிளிண்டு என நல்ல உடல் வலிமையுள்ள வீரர்களும் யுனைடெட்டிடம் இருப்பதால் சிட்டி பாடு சற்று சிரமமானதே என்றும் ஷியரர் விளக்குகிறார். இதை எல்லாவற் றையும் வைத்துப் பார்க்கும்போது இன்றிரவு நடக்கும் ஆட்டம் ரசிகர்கள் தங்கள் இருக்கைகளை விட்டு அகலா வண்ணம் வைத் திருக்கும் என்பது திண்ணம்.

