ரியோ டி ஜெனிரோ: உடற்குறையுள் ளோருக்கான ஒலிம்பிக் போட்டியில் (பாராலிம்பிக்) பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை எனும் பெருமை யைப் பெற்றுள்ளார் குர்கானைச் சேர்ந்த 45 வயது தீபா மாலிக். மகளிருக்கான குண்டெறிதல் போட்டியில் 4.61 மீட்டர் தூரம் வீசிய தீபா, வெள்ளிப் பதக்கத்தைத் தமக்குச் சொந்தமாக்கினார். இந்தப் போட்டியில் பஹ்ரேனின் ஃபாத்திமா நீதம் 4.76 மீட்டர் தூரம் வீசி தங்கம் வென்றார். 4.28 மீட்டர் தூரம் வீசிய கிரீசின் டிமிட்ரா கொராகிடா வெண்கலம் வென்றார். 1999ஆம் ஆண்டிலிருந்து முதுகுத் தண்டில் ஏற்பட்ட கட்டியால் தீபாவின் இடுப்புக்குக் கீழ் உள்ள பகுதிகள் செயலிழந்தன. அதனைத் தொடர்ந்து சக்கரநாற்காலி பயன்படுத்தும் கட்டா யம் அவருக்கு ஏற்பட்டது.
அதற்கு முன்பு அவர் ராஜஸ்தான் மாநிலத்தின் மகளிர் கிரிக்கெட் அணியில் இடம்பெற்றிருந்தார். சக்கரநாற்காலி பயன்படுத்த வேண்டியிருந்தும் விளையாட்டுகளில் அவருக்கு இருந்த ஆர்வமும் ஈடுபாடும் தணியவில்லை. உதாரணத்துக்கு, 2008ஆம் ஆண்டில் யமுனா நதி செல்லும் திசைக்கு எதிர்திசையில் நீந்தி சாதனை படைத்தார் தீபா. நான்கு ஆண்டுகள் கழித்து நீச்சலில் படைத்த சாதனைகளுக்காக தீபாவுக்கு அர்ஜுனா விருது வழங்கப் பட்டது. இதுவரை அவர் 17 அனைத்துலகப் பதக்கங்கள், இந்தியாவின் தேசிய அளவில் 58 தங்கப் பதக்கங்கள் வென்றுள்ளார்.
4.61 மீட்டர் தூரம் வீசி மகளிருக்கான குண்டெறிதல் போட்டியில் வெள்ளி வென்ற தீபா மாலிக். படம்: இணையம்

