கோல்கத்தா: இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் ராகுலுக்கு பதில் கௌதம் காம்பீர் (படம்) சேர்க்கப்பட்டுள்ளார். நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 3 டெஸ்ட் போட்டித் தொடரில் கான்பூரில் நடந்த முதல் டெஸ்டில் 197 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இந்தியா, நியூசிலாந்து அணி கள் மோதும் 2வது டெஸ்ட் போட்டி நாளை கோல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் தொடங்குகிறது. இந்த டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் கௌதம் காம்பீர் இடம்பெற்றுள்ளார். தொடக்க வீரர் ராகுல் காயம் அடைந்துள்ளதால் அவர் சேர்க்கப்பட்டுள்ளார். 34 வயதான கௌதம் காம்பீர் 2 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணிக்குத் தேர்வாகி இருப்பது குறிப்பிடத்தக்கது. கடைசியாக 2014ஆம் ஆண்டு லண்டனில் நடந்த டெஸ்ட் போட்டி யில் விளையாடினார் அவர். நாளைய போட்டியில் முரளி விஜய்யுடன் இணைந்து தொடக்க வீரராக அவர் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் கௌதம் காம்பீர்
1 mins read
-

