இந்தூர்: இந்திய வீரர் அஸ்வினின் சுழலைத் தாக்குப்பிடிக்க முடியாமல் நியூசிலாந்து அணியினர் சரண் அடைந்ததால் மூன்றாவது டெஸ்ட் போட்டியை 321 ஓட்டங்கள் வித்தி யாசத்தில் வென்ற இந்திய கிரிக் கெட் அணி, தொடரையும் 3=0 என ஒட்டுமொத்தமாக அள்ளியது. முதல் இன்னிங்சில் ஆறு விக் கெட்டுகளைச் சாய்த்த அஸ்வின், இரண்டாம் இன்னிங்சிலும் ஏழு நியூசி. வீரர்கள் ஆட்டமிழக்கக் காரணமாக அமைந்தார். இதனால் ஆட்ட நாயகன் விருது அவர் வசமானது. அத்துடன், இந்தத் தொடரில் மொத்தம் 27 விக்கெட்டு களைக் கைப்பற்றியதால் ஏழாவது முறையாகத் தொடர் நாயகன் விருதையும் வென்று அவர் சாதனை படைத்தார்.
அணித் தலைவர் கோஹ்லி (211), ரகானே (188) ஆகியோரின் அபார ஆட்டத்தில் முதல் இன்னிங் சில் இந்தியா ஐந்து விக்கெட் இழப்பிற்கு 557 ஓட்டங்களை எடுத்தது. தொடர்ந்து பந்தடித்த நியூசி. அணி 299 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. 'ஃபாலோ ஆன்' கொடுத்து இருக்க முடியும் என்றாலும் இந்திய அணியே மீண்டும் பந்தடித்தது. நேற்று நான்காவது நாள் ஆட்டத்தின் தொடக்கத்திலேயே 19 ஓட்டங்கள் எடுத்த நிலையில் முரளி விஜய் ஆட்டமிழந்தார். ஆயினும், கௌதம் கம்பீர் (50), சேத்தேஸ்வர் புஜாரா (101*) ஆகியோர் ஓட்டங்களை விளாச, மூன்று விக்கெட் இழப்பிற்கு 216 ஓட்டங்களை எடுத்திருந்த போது இந்தியா தனது 2வது இன்னிங்சை முடித்துக்கொண்டது.

