ஃபாரோ (போர்ச்சுகல்): பெல்ஜியம் காற்பந்து ஆட்டக்காரர் கிறிஸ்டியன் பென்டேக்கே ஆட்டம் தொடங்கி ஏழே நொடிகளில் கோலடித்து உலகக் கிண்ண வரலாற்றில் புதிய சாதனை படைத்துள்ளார். உலகக் கிண்ணத் தகுதிச் சுற்றுப் போட்டிகளில், நேற்று அதிகாலை நடந்த ஐரோப்பிய கண்டத்திற்கான 'எச்' பிரிவு ஆட்டத்தில் பெல்ஜியம் 6-0 என்ற கோல் கணக்கில் ஜிப்ரால்டர் அணியை நசுக்கியது.
கிரிஸ்டல் பேலஸ் குழு ஆட்டக்காரரான 25 வயது பென்டேக்கே, ஆட்டம் தொடங்கிய வேகத்தில் ஜிப்ரால்டர் தற்காப்பு வீரர்களைத் தாண்டிச் சென்று பந்தை வலைக்குள் தள்ளியதை அவ்வணி கோல்காப்பாளர் டேரன் இப்ராகிமால் வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தது. 1993ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான உலகக் கிண்ணத் தகுதிச் சுற்று ஆட்டத்தில் சான் மரினோவின் டேவிட் குவால்டியரி 8.3 நொடிகளில் கோலடித்ததே முந்தைய சாதனையாக இருந்தது.

