குவாந்தான்: மலேசியாவில் நடைபெற்று வரும் ஆசிய சாம்பியன்ஸ் கிண்ண ஆடவர் ஹாக்கியில் இந்தியா 9-0 என்ற கோல் கணக்கில் சீனாவை வென்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 10 புள்ளிகளுடன் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளது. இத்தொடரில் இதுவரை தோல் வியைச் சந்திக்காத இந்தியா 4 ஆட்டங்களில் விளையாடியுள்ளது. அவற்றில் மூன்று வெற்றிகளையும் ஒரு சமநிலையையும் அது பதிவு செய்துள்ளது.
சீனாவுக்கு எதிரான ஆட்டம் தொடங்கியது முதலே இந்திய வீரர்கள் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். 9வது நிமிடத்தில் தனது அணிக்கான கோல் கணக்கை ஆரம்பித்து வைத்தார் ஆகாஷ்தீப். அதைத்தொடர்ந்து அடுத்து அடுத்து கோல்கள் விழ, முதல் பாதி நேரத்தில் இந்தியா 4-0 என முன்னிலையில் இருந்தது. 2வது பாதி நேரத்திலும் இந்தியாவின் ஆதிக்கம் தொடர மேலும் ஐந்து கோல்கள் போடப் பட்டன.
இதனால் இந்தியா 9-0 என சீனாவை துவம்சம் செய்தது. இந்திய அணி தரப்பில் ஆகாஷ் தீப் சிங், ஆபான் யூசுப், ஜஸ்தித் சிங் குலார் ஆகியோர் தலா இரு கோல்களும் ரூபிந்தர் பால் சிங், திம்மையா, லலித் உபாத்யாய் ஆகியோர் தலா ஒரு கோலும் அடித்தனர். இந்திய அணியின் கோல் காப்பாளர் ஸ்ரீஜேஷிற்குப் பதிலாக களமிறங்கிய ஆகாஷ் சித்கே சிறப்பான ஆட்டத்தை வெளிப் படுத்தினார்.
அதேசமயம் சீன அணியின் தடுப்பாட்டம் மோசமான வகையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், 4 ஆட்டங்களில் விளையாடி மூன்று தோல்விகளைச் சந்தித்துள்ள சீனா அரையிறுதி வாய்ப்பை இழந்தது. பட்டியலில் முதலிடத்தைத் தக்க வைத்துக்கொள்ளும் முனைப்புடன் இந்தியா தனது கடைசி லீக் ஆட்டத்தில் நேற்று மாலை மலேசியாவை எதிர் கொண்டது.
அரையிறுதிக்கு முன்னேறிய மகிழ்ச்சியில் இந்திய ஹாக்கி அணியினர். படம்: இணையம்

