ஃபிஃபாவுக்கு £300 மி. இழப்பு

ஃபிஃபாவுக்கு £300 மி. இழப்பு

1 mins read

ஸுரிக்: அனைத்துலகக் காற்பந்துக் கூட்டமைப்பு (ஃபிஃபா) 2016ஆம் ஆண்டில் 300 மில்லியன் பவுண்டு (S$521 மி.) இழப்பைச் சந்தித்ததாக அறிவித்துள்ளது. இத்துடன் இந்தச் சரிவு நின்றுவிடாது என்றும் 2017ஆம் ஆண்டில் இதைவிட அதிகமாக, அதாவது கிட்டத்தட்ட 400 மி. பவுண்டு இழப்பு ஏற்படலாம் என்று எதிர்பார்ப்பதாகவும் ஃபிஃபா தெரிவித்து உள்ளது. ஃபிஃபாவைச் சூழ்ந்துள்ள ஊழல் மோசடிகள் தொடர்பான வழக்குச் செலவுகளும் விவேகமற்ற முந்தைய முதலீடுகளுமே இந்த இழப்பிற்குக் காரணமாகக் கூறப்பட்டது. 2018ஆம் ஆண்டில் ரஷ்யாவில் உலகக் கிண்ணத் தொடர் நடைபெற இருப்பதால் ஆதரவாளர்கள், விளம்பரம், தொலைக் காட்சி ஒளிபரப்பு உரிமம் ஆகியவை மூலம் நல்ல வருமானம் கிடைக்கும். அதனால், நான்காண்டுகால நிதி இழப்பிலிருந்து விடுபட்டு 2018ல் 80 மி. பவுண்டு லாபத்தை ஈட்டலாம் என்று ஃபிஃபா எதிர்பார்க்கிறது.