அர்ஜெண்டினா காற்பந்துக் குழு சிங்கப்பூர் வந்தடைந்துள்ளது. ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் நேற்று முன்தினம் பிரேசிலுக்கு எதிராக நடைபெற்ற நட்புமுறை ஆட்டத்தில் 1=0 எனும் கோல் கணக்கில் வெற்றி பெற்ற ஆர்ஜெண்டினா, சாங்கி விமான நிலையத்தில் நேற்று மாலை தரையிறங்கியது. மெல்பர்னில் ஏறத்தாழ 100,000 ரசிகர்களுக்கு முன்பாக விளை யாடியதை அடுத்து, எவ்வித ஆர்ப்பாட்டமின்றி அமைதியான முறையில் சிங்கப்பூர் ரசிகர் களுக்குத் தெரியாமல் இங்கு வர அர்ஜெண்டினா குழு முயற்சி செய்தது. ஆனால் இந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. சாங்கி விமான நிலையத்தின் பிரமுகர் களுக்கான முனையத்தின் வாசலில் செய்தியாளர்களும் ரசிகர்களும் மிகுந்த ஆவலுடன் காத்துக்கொண்டிருந்தனர்.
அர்ஜெண்டினாவின் நட்சத்திர வீரர் லயனல் மெஸ்ஸி சிங்கப்பூர் குழுவுக்கு எதிராக நடைபெறும் நட்புமுறை ஆட்டத்தில் களமிறங்க மாட்டார் என்று அண்மையில் செய்திகள் வெளியாயின. மெல்பர்னில் நடைபெற்ற ஆட்டத்துக்குப் பிறகு தமது திருமணத்துக்காக அவர் அர்ஜெண்டினா திரும்புவார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அவரும் நேற்று தமது சக வீரர்களுடன் சிங்கப்பூர் வந்திருந்தார். இந்நிலையில், அவர் சிங்கப்பூர் குழுவுக்கு எதிரான ஆட்டத்தில் விளையாடுவாரா என்பது குறித்து உறுதியாக தெரியவில்லை. அர்ஜெண்டினா வீரர்கள் தங்கும் ஃபுல்லர்ட்டன் ஹோட்டல் வாசலிலும் ஏறத்தாழ 50 ரசிகர்கள் வாழ்த்து பதாகைகள் ஏந்தி காத்துக்கொண்டிருந்தனர்.
அர்ஜெண்டினா வீரர்களைப் பார்க்க சாங்கி விமான நிலையத்தின் பிரமுகர்களுக்கான முனையத்திற்கு வெளியே ஆசையோடு காத்துக்கொண்டிருந்த இளம் சிங்கப்பூர் ரசிகர்கள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

