கோலாலம்பூர்: சிங்கப்பூரின் சீருடற்பயிற்சி வீராங்கனையருக்கு இவ்வாண்டின் தென் கிழக்காசிய விளையாட்டுகள் ஏமாற்றம் தரும் வகையில் அமைந்துள்ளது. கடந்த 12 ஆண்டுகளில் தொடர்ந்து தங்கம் வென்று வந்த சிங்கப்பூர் மகளிர் இந்த ஆண்டில்தான் தங்கம் வெல்ல தவறியது. இம்முறை இந்தக் குழு இரண்டு வெள்ளிப் பதக்கங்களையும் மூன்று வெண்கலங்களையும் வென்றது. 2005ஆம் ஆண்டில் நடைபெற்ற போட்டியில் சிங்கப்பூர் சீருடற்பயிற்சி மகளிர் இரண்டு தங்கப் பதக்கங்களைக் கைப்பற்றினர். 2007ஆம் ஆண்டில் நான்கு தங்கப் பதக்கங்களை வென்றனர். 2011ஆம் ஆண்டிலும் 2015ஆம் ஆண்டிலும் தலா ஒரு தங்கப் பதக்கம் வென்றது சிங்கப்பூர் குழு.
ஆனால் இவ்வாண்டு போட்டியிட்ட சிங்கப்பூர் மகளிர் அணியின் ஒட்டுமொத்த செயல்பாடு திருப்தி அளிக்கும் வகையில் இருந்ததாகப் பயிற்றுவிப்பாளர் நெட்டாலி ரைபேக் தெரிவித்தார். காயம் காரணமாகத் தங்கம் வெல்லும் வாய்ப்பை சிங்கப்பூர் மகளிர் இழந்ததாக சிங்கப்பூர் சீருடற் பயிற்சித் தலைவர் சோய் கா கின் கூறினார் இந்நிலையில், 2024ஆம் ஆண்டில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டியில் முத்திரை பதிக்க இலக்கு கொண்டிருப்பதாக அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
தங்கப் பதக்கம் வெல்லாமல் நாடு திரும்பும் சிங்கப்பூர் சீருடற்பயிற்சி மகளிர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

