டாக்கா: டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஆஸ்திரேலிய அணியை முதன்முறையாகத் தோற்கடித்து சாதித்திருக்கிறது பங்ளாதேஷ் கிரிக்கெட் அணி. இரு போட்டிகள் கொண்ட தொடரின் முதல் ஆட்டத்தில் 20 ஓட்ட வித்தியாசத்தில் அவ்வணி வென்றது. முதல் இன்னிங்சில் 260 ஓட்டங்களை எடுத்த பங்ளாதேஷ் அணி, அடுத்து ஆடிய ஆஸி. அணியை 217 ஓட்டங்களில் சுருட்டியது. ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு ஒத்துழைக்க, 2வது இன்னிங்சில் பங்ளாதேஷால் 221 ஓட்டங்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதையடுத்து, 265 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இரண்டாம் இன்னிங்சை ஆடத் தொடங்கிய ஆஸி. அணி மூன்றாம் நாள் முடிவில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 109 ஓட்டங்களை எடுத்திருந்தது. நேற்று நான்காம் நாளில் ஆஸி. தொடக்க வீரர் வார்னர் சதமடித்தார். ஆயினும், 112 ஓட்டங்களில் அவர் வெளியேற, அதன்பின் ஆஸி.யின் பந்தடிப்பு வரிசை மளமளவெனச் சரிந்தது.
இரு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 89 ஓட்டங்களை எடுத்ததுடன் பத்து விக்கெட்டுகளையும் கைப்பற்றி பங்ளாதேஷ் அணியின் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றிக்கு வித்திட்ட ஷாகிப் அல் ஹசன். படம்: ஏஎஃப்பி

