கொழும்பு: இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் குறைந்தது இரு ஆட்டங்களில் வெற்றி பெறத் தவறிய காரணத்தினால் 2019ஆம் ஆண்டில் நடைபெற இருக்கும் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு நேரடியாகத் தகுதி பெறுவதை உறுதி செய்ய இலங்கை அணி தவறியிருக்கிறது. 1996ஆம் ஆண்டு உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் கிண்ணம் ஏந்திய இலங்கை அணிக்கு இப்படி ஒரு நிலை ஏற்பட்டிருப்பதைக் கண்டு அந்நாட்டின் கிரிக்கெட் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இம்மாதம் 30ஆம் தேதி நிலவரப்படி ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான உலகத் தரவரிசை யில் முதல் ஏழு இடங்களில் இருக்கும் அணிகள் அடுத்த உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு நேரடியாகத் தகுதி பெறும். தரவரிசையில் கடைசி நான்கு இடங்களில் இருக்கும் அணிகள் உலகக் கிண்ணப் போட்டிக்குத் தகுதி பெறத் தகுதிச் சுற்றில் போட்டியிடவேண்டும்.
இந்நிலையில், இலங்கை நேரடியாகத் தகுதி பெற வெஸ்ட் இண்டீஸ் அணி அதன் அடுத்த ஆட்டங்களில் குறைந்தது ஓர் ஆட்டத்திலாவது தோல்வி அடையவேண்டும். இந்தியாவுக்கு எதிராக நாளை நடைபெறும் கடைசி ஒருநாள் போட்டியில் இலங்கை ஒருவேளை வெற்றி பெற்றாலும் நேரடித் தகுதி பெற அது போதாது. இதற்கிடையே, இலங்கைக்கு எதிராக நேற்று முன்தினம் நடைபெற்ற நான்காவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 168 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய அணித் தலைவர் விராத் கோஹ்லியும் ரோகித் சர்மாவும் சதம் அடித்தனர். மணீஷ் பாண்டே 50 ஓட்டங்களும் டோனி 49 ஓட்டங்களும் எடுத்தனர். இதன்மூலம், இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 375 ஓட்டங்கள் குவித்தது. இதை தொடர்ந்து, இலங்கை அணி 43 ஓவர்களில் 207 ஓட்டங்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. கோஹ்லி ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

