விராத் கோஹ்லியின் இரட்டை சாதனை

விராத் கோஹ்லியின் இரட்டை சாதனை

2 mins read

கொழும்பு: கிரிக்கெட் விளை யாட்டில் குறைந்த போட்டிகளில் 15,000 ஓட்டங்களைக் கடந்து புதிய சாதனை படைத்துள்ளார் இந்திய அணித் தலைவர் விராத் கோஹ்லி. நேற்று முன்தினம் நடந்த இலங்கைக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் போது, கோஹ்லி ஏழு ஓட்டங்களை எடுத்த போது அவர் இந்தச் சாதனையை படைத்தார். டெஸ்ட், ஒருநாள், 20 ஓவர் என கிரிக்கெட்டின் அனைத்து வகை போட்டிகளையும் சேர்த்து, இதுவரை 304 போட்டிகளில் விளையாடியுள்ள கோஹ்லி 15,000 ஓட்டங்களைக் கடந்துள்ளார். இதற்கு முன்பாக தென் ஆப்பிரிக்க வீரர் ஹிசிம் அம்லா 336 போட்டிகளில் 15,000 ஓட்டங்களைக் கடந்ததே சாதனை யாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இலங்கைக்கு எதிரான இப் போட்டியில் 171 ஓட்டங்கள் எடுத் தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது இந்திய அணி. இறுதியில் 174 ஓட்டங்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தி யாசத்தில் வெற்றியை விரட்டிப் பிடித்தது இந்திய அணி.

இதில் 54 பந்துகளைச் சந்தித்த கோஹ்லி மொத்தம் 82 ஓட்டங்களை விளாசினார். இதன் மூலம் அனைத்துலக டி20 போட்டிகளின் விரட்டலில் 21 இன்னிங்சில் மொத்தம் 1,016 ஓட்டங்களை எடுத்து மற்றோர் சாதனைக்கும் சொந்தக்காரர் ஆனார் கோஹ்லி. இதற்கு முன்னர் மெக்கல்லம் 38 இன்னிங்சில் 1,006 ஓட்டங்கள் எடுத்திருந்தது சாதனையாக இருந்தது. முன்னதாக பூவா தலையா வென்ற இந்திய அணி இலங்கை பந்தடிக்கச் செய்தது. இலங்கை அணி 7 விக்கெட்டுகள் இழப் புக்கு 170 ஓட்டங்களை எடுத்தது. தொடர்ந்து ஆடிய இந்திய அணியின் மணீஷ் பாண்டே 20 ஓவர் போட்டிகளில் தனது முதல் அரைசதத்தைப் பதிவு செய்தார்.